டெல்லி: தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த ரூ.8,200 கோடியை உலக வங்கி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

கொரோனா பேரழிவுக்கு பிறகு, நாடு முழுவதும் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிடன்றன. இதற்காகவே, பிரதமர் ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு திட்டத்தை 2021 அக்டேர்பர் மாதம் மத்திய அரசு துவக்கியது. இத்திட்டத்தின் வாயிலாக, நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பிரதமர் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்படி, தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் சுகாதார அமைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில், 8,200 கோடி ரூபாய் கடன் அளிக்க உலக வங்கி முன்வந்துள்ளது. இதற்கான கடன் ஒப்பந்தம் இருதரப்புக்கும் இடையே கையெழுத்தானது.

மத்திய அரசு தரப்பில், பொருளாதார விவகாரத்துறை கூடுதல் செயலர் ரஜத்குமார் மிஸ்ராவும், உலக வங்கி தரப்பில் வங்கியின் இந்தியப்பிரிவு இயக்குனர் ஆகஸ்டி டானோ கோமேவும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த கடன் தொகை வாயிலாக, தமிழகம், ஆந்திரா, கேரளா, மேகாலயா, ஒடிசா, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களின் சுகாதார உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.