சென்னை: சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2ஆம் நிலை காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அத்துடன் கல்வித்துறையில் கருணை அடிப்படையில் 61 நபர்களுக்கு பணி ஆணை, சிப்காட் ஆய்வகம் திறப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் 143 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.210 கோடி முதலீட்டில், 1000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் அமைத்துள்ள மின்கலன் பரிசோதனை ஆய்வகத்தினை திறந்து வைத்து, சிப்காட்- செய்யார் தொழிற்பூங்காவில் ரூ.290 கோடி முதலீட்டில் விபத்து பரிசோதனை ஆய்வகம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், இராதாபுரம் தொகுதியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரூ.6.86 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 303 திறன் வகுப்பறைகளை திறந்து வைத்து, கருணை அடிப்படையில் 61 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் 143 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தலைமைச் செயலகத்தில், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட இரண்டாம் நிலைக் காவலர்கள் 143 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,. சிறைத்துறை குற்றவியல் நீதிமுறை அமைப்பின் முக்கிய அங்கமாக விளங்குகிறது. குற்றவாளிகளை சிறையில் வைத்து, மீண்டும் குற்றம் இழைக்காத வண்ணம் அவர்களைத் தடுப்பது மட்டுமல்லாமல், விடுதலைக்குப் பின்னர் சமூகத்தில் எளிதில் இணைந்து, ஆக்கமுடைய குடிமக்களாக விளங்கும் வகையில் அவர்களை சீர்திருத்தி, அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதே சிறைத்துறையின் முக்கிய குறிக்கோளாகும். சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறையின் செயல் திறனை மேம்படுத்திட கடந்த 2 ஆண்டுகளில் ரூ.5.71 கோடி செலவினத்தில் பாதுகாப்பு கருவிகள், கணினி போன்ற பல்வேறு வகையான உபகரணங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ளன.
களப்பணியாளர்களின் நலனுக்காக மிகை நேர பணிக்கான ஊதியம் ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2252 களப்பணியாளர்கள் பயன்பெற்றுள்ளனர். இடர்படி ரூ.900ல் இருந்து ருந்து ரூ.1000-ஆக சிறை அலுவலர் முதல் சிறை கண்காணிப்பாளர் வரையிலும், ரூ.800ல் இருந்து ருந்து ரூ.1000-ஆக இரண்டாம் நிலைக்காவலர் முதல் துணை சிறை அலுவலர் வரையிலும் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 3526 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பயனடைந்துள்ளனர். ரூ.1 கோடி செலவினத்தில் சிறைவாசிகளை நல்வழிப்படுத்தி மறுவாழ்வு அளித்திட “சீர்திருத்த சிறகுகள்” என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
சிறைவாசிகளின் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்காக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்ற புத்தக கண்காட்சிகளில் முதல் முறையாக சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை சார்பாக அரங்கு அமைக்கப்பட்டு ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் நன்கொடையாக பெறப்பட்டு சிறை நுாலகங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. சிறைகளில் பணிபுரியும் மனநல ஆலோசகர்களின் மதிப்பூதியம் ரூ.15,000ல் இருந்து ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதோடு, 12 சமூக இயல் வல்லுநர்கள் பணியிடங்கள் மற்றும் 3 பெண் நல அலுவலர் பணியிடங்கள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
தற்போது, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களுக்கு 143 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள இரண்டாம் நிலைக் காவலர்களுக்கு திருச்சி தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் 6 மாத கால அடிப்படை பயிற்சியும், சிறைகளில் ஒரு மாதகால உள்களப் பயிற்சியும் வழங்கப்படும். இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் திரு.சிவ்தாஸ் மீனா, இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை முதன்மைச் செயலாளர் திருமதி.பெ.அமுதா, இ.ஆ.ப., சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் திரு.அமரேஷ் புஜாரி, இ.கா.ப., மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.