டில்லி,
உலக மகளிர் தினத்தையொட்டி, மகளிருக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவர்களின் மகப்பேறு விடுமுறை காலத்தை 26 வாரமாக அதிகரிக்கும் சட்ட திருத்த மசோதா நேற்றைய பாராளுமன்ற கூட்டத்தின்போது நிறைவேற்றப்பட்டது.
கர்ப்பிணி பெண்களின் மகப்பேறு விடுமுறையை அதிகரிக்கும் மகப்பேறு ஆதாய மசோதா (திருத்தம்) மாநிலங்களவையில் கடந்த ஆண்டே நிறைவேற்றப்பட்டது.
ஆனால் மக்களவையில் நிறைவேற்றாமல் காலம் கடந்தது. இந்நிலையில் நேற்று மக்களவையில் மகப்பேறு ஆதாய மசோதா (திருத்தம்) 2016 நிறைவேற்றப்பட்டது.
இதன்படி, அரசு மற்றும் தனியார் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு காலம் 12 வாரத்திலிருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்படுவது உறுதியாகிள்ளது.
இந்த விடுமுறை, முதல் 2 குழந்தைகளுக்கு மட்டுமே. 3வது குழந்தைக்கு மகப்பேறு விடுப்பு காலம் 12 வாரம் மட்டுமே.
இதனால் 18 லட்சம் பெண்கள் பலன் அடைவர் என்று கூறப்பட்டுள்ளது.