ஸ்ரீநகர்,

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சண்டையின்போது 15 வயது இளைஞன் ஒருவரும் துப்பாக்கி குண்டுக்கு பலியானார்.

காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா பகுதிக்கு உட்பட்ட பத்கம்போரா கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.

நேற்று அதிகாலை 2.30 மணியளவில் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்ததை தொடர்ந்து, பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர்மீது துப்பாக்கியால் சுடத் தொடங்கினர்.

சுமார் 9 மணிநேரம் நடந்த துப்பாக்கி சண்டையின் முடிவில் இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்கள் இருவரும் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கி சண்டையின்போது தவறுதலாக குண்டுபாய்ந்து அமீர் நசீர்வானி என்ற 15 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் சஜத் அகமத் பாத் என்ற வாலிபர் இடுப்பில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள டிராபா பகுதியில் உடலில் குண்டுகள் பாய்ந்த நிலையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ராணுவ வீரர் ஒருவர் இறந்து கிடந்தார். அவர் ராஷ்டிரிய ரைபிள் பிரிவில் பணியாற்றி வந்த பால்ராஜ் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவரது சாவுக்கு காரணம் தெரியவில்லை.