சென்னை: பெண்களை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மாநில மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
கடந்த 25ம் தேதி சென்னையில் ஒரு திரைப்படம் சம்பந்தமான நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய இயக்குனர் பாக்யராஜ், திருமணம் ஆன ஆண்கள் தவறான வழியில் செல்வது சரியானது என்ற பொருள் கொள்ளும் வகையில் பேசினார்.
அதேநேரத்தில், தவறான பாதையில் பெண்கள் செல்வது பெரிய தவறு என்று பேசியதாக தெரிகிறது. பொள்ளாச்சி பாலியல் சம்பவத்திற்கு பெண்களும் காரணம் என்று பேச அது, பெரும் சர்ச்சையானது.
அவரது இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதுதொடர்பாக மாநில மகளிர் ஆணையம் விளக்கம் அளிக்குமாறு, பாக்யராஜூவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. அதன்படி, வரும் 2ம் தேதியன்று, பாக்யராஜ், மகளிர் ஆணைய தலைவர் கண்ணகி பாக்யநாதன் முன்பாக ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.