சென்னை உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென ‘லிப்ட்’ பழுதானதால், பராமரிப்பு பெண் ஊழியர் ஒருவர் 1 மணி நேரம் சிக்கி தவித்தார்.

சென்னை மாநகர போக்குவரத்து நெருக்கடியை குறைக்க மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக கோயம்பேடு- ஆலந்தூர் வரையிலும், சின்னமலை- விமான நிலையம் வரையிலும் உயர்மட்ட பாதையும், திருமங்கலம்-சென்ட்ரல் வரையிலும், சைதாப்பேட்டை- வண்ணாரப்பேட்டை வரையிலும் சுரங்கப்பாதையும் மெட்ரோ ரயில் சேவைக்காக அமைக்கப்பட்டு, சேவைகள் நடந்து வருகிறது. பயணிகள்-பொதுமக்கள் வரவேற்பை தொடர்ந்து மாதவரம்-சிறுசேரி வரை 2வது கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் நடந்து வருகிறது.

இந்த நிலையில் பாரிமுனையில் உள்ள உயர்நீதிமன்ற மெட்ரோ ரயில் நிலையத்தில் திடீரென ‘லிப்ட்’ பழுதானது. இதனால் பராமரிப்பு பெண் ஊழியர் நதியா 1 மணி நேரம் சிக்கி தவித்தார். தொடர்ந்து ஒருமணி நேரம் சிக்கியதால், சுவாசிக்க இயலாமல் திணறி மயங்கிய நதியாவை, மற்ற ஊழியர்கள் மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டுச் சேர்த்தனர்.