சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை அக்டோபர் 9ம் தேதி கூடுகிறது என  கூறிய சபாநாயகர் அப்பாவு, விரைவில் தேர்தல் வர உள்ளதால் மகளிருக்கான 33 சதவீதம் மசோதாவை மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது என தெரிவித்தார்.

சென்னை தலைமை செயலகத்தில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வரும் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி காலை 10 மணிக்கு தலைமை செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் சட்டமன்றம் கூடுகிறது என கூறினார்.

இந்த கூட்டத்தொடரில், 2023-24ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவீனங்களுக்கான மானியக்கோரிக்கையினை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் அறிமுகம் செய்வார்கள்.

கூட்டத்தொடர் எவ்வளவு நாட்கள் நடைபெறும் என்பது அலுவல் ஆய்வுக்குழு கூடி முடிவு செய்யும் என தெரிவித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறியவர்,  நாடாளுமன்றதில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப் பட்டால் சட்டமன்றத்திலும் அறிமுகப்படுத்தப்படுமா? என்றதற்கு,  புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மசோதாவை அறிமுகப்படுத்தி உள்ளார்கள்; அவ்வுளவுதான். அது நடைமுறைக்கு வருமா என்பதுதான் தெரியவில்லை.

மத்தியஅரசு 2014ஆம் ஆண்டில் இந்த முயற்சியை எடுத்திருந்தால் இந்த அரசை நூறுசதவீதம் நம்பலாம் ஆனால் தேர்தல் வர உள்ள தால் அதற்கு முன்னர் 33 சதவீதம் என்று சொல்கிறார்கள் என்று விமர்சனம் செய்தவர், மகளிருக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த மசோதாவை கொண்டுவந்தார்களோ என்னவோ, இதை நான் சொல்லவில்லை; என்னிடம் சொல்பவர்கள் அப்படி சொல்கிறார்கள் என தெரிவித்தார்.

கலைஞர் மகளிர் உரிமை தொகை தொடர்பான கேள்விக்கு, தமிழ்நாடு அரசு இந்த  திட்டம் மூலம் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மாதம் 1000 ரூபாய் கொடுத்து சிரிக்க வைத்துவிட்டார்கள் என்றார்.

அதிமுக எதிர்க்கட்சித்தலைவர் குறித்து ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, அதிமுக எதிர்க்கட்சி துணைத் தலைவர் தொடர்பாக எடுத்த முடிவை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள் என்றார்.

தொடர்ந்து பேசியவர், நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தை ஜனாதிபதியைதான் அழைத்து செய்வார்கள். ஆனால் அவர்களை புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கும் கூப்பிடவில்லை; நேற்று நடந்த கூட்டுக்கூட்டத்திற்கும் கூப்பிடவில்லை, பழைய கட்டத்தில் இருந்து புதிய கட்டத்திற்கு வரும் கூட்டத்திற்கும் அழைக்கவில்லை.

நாட்டின் முதல் குடிமகன் குடியரசுத்தலைவரை என்ன நோக்கத்திற்காக புறக்கணிக்கிறார்கள் என்பது எனக்கு தெரியாது. அந்த அம்மா தாழ்த்தப்பட்ட பெண்மணி என்பதால் அவரை புறக்கணிப்பதாக பத்திரிக்கை செய்திகளில் நான் பார்த்தேன் என தெரிவித்தார்.

ஆளுநருக்கும் உங்களுக்குமான உறவு இணக்கமாக உள்ளதா என்ற கேள்விக்கு, எந்த கவர்னர் வந்தாலும் எனக்கு அவர்களுக்கும் சொத்துத்தகராறா ஏற்படப்போகிறது. அமைச்சரவை கூடி முடிவெடுக்க கூடிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டும்தான் ஆளுநருக்கு பணி. மாண்புமிகு ஆளுநராக இந்தாலும் இது மதசார்புள்ள நாடு என சொல்லிவிடுகிறார்கள்; அது தவறு, அதனை தவிர்க்கலாம் என்றுதான் நாம் சொல்கிறோம்.

இவ்வாறு கூறினார்.