சென்னை: தமிழ்நாடு பாஜகவில் கடுமையான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், “அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளார்.

  • பாஜக உறுப்பினராக இருந்ததே வேஸ்ட்
  • ‘பாலியல் குற்றவாளி அண்ணாமலை’
  • அண்ணாமலைமீது விசாரணை நடத்தப்பட வேண்டும்
  • “அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” 
  • மோட்டார் வாய்” அண்ணாமலை
  • நான் தி.மு.க ஸ்லீப்பர் செல்…’ என ‘குருமூர்த்தி கும்பல்… கூறுகிறது

காயத்ரி ரகுராம் பாஜகவில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். இறுதியாக வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை பிரிவின் தலைவராகவும் இருந்தவர்.  தமிழ்நாடு பாஜகவில் அடுத்தடுத்து எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கள் கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றன. அண்ணாமலை மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றது முதல், மூத்த பாஜக நிர்வாகிகள் அவமதிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், பாலியல் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லை.

சமீபத்தில் நடைபெற்ற திமுக-விலிருந்து வெளியேறி பா.ஜ.க-வில் இணைந்து சர்ச்சையை ஏற்படுத்திய,  திருச்சி சூர்யா சிவா, தமிழக பா.ஜ.க-வின் சிறுபான்மையினர் அணித் தலைவராக இருக்கும் டெய்சி சரணை ஆபாசமாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்துப் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து, “சொந்தக் கட்சிப் பெண்களை ஏன் தாக்க வேண்டும்… இந்த ஹைனாக்களுக்கு அழகு பார்க்க கட்சியில் மாநிலப் பதவி கொடுத்தது மிகப்பெரிய தவறு என  விமர்சனம் செய்த காயத்ரி ரகுராம் 6 மாதம் சஸ்பெண்டு செய்யப்பட்டார். அதே வேளையில், திருச்சி சூர்யா சிவாவும், பா.ஜ.க-விலிருந்து வெளியேறினார்.

தன்னிடம் விளக்கம் கேட்காமலேயே மாநில தலைவர் அண்ணாமலை நடவடிக்கை எடுத்துவிட்டதாக காயத்ரி புகார் தெரிவித்தார். இந்த நிலையில், அவர் தனது பாஜக உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அண்ணாமலை தன்னை துபாயில் ஒரு ஹோட்டலில் 150 பேர் முன்னிலையில் அவமானப்படுத்தி பேசியிருந்தார் என காயத்ரி குற்றம்சாட்டினார். இதையடுத்து தொடர்ந்து காயத்ரியை அவதூறாக பாஜக நிர்வாகிகள் பேசி வந்தனர். இந்த நிலையில் பாஜகவிலிருந்து விலகுவதாக காயத்ரி அறிவித்துள்ளார். தான் கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்ததற்காக, ஆறுமாதகாலம் இடைநீக்கம் செய்யப்பட்டது என்ன நியாயம்..? எல்லா இடங்களிலும் வளர்ந்தால் கீழே தள்ளிவிடத்தானே பார்ப்பார்கள். தேர்தல் வரப்போகிறது. சிலர் சீட் கேட்கப் போகிறார்கள். அவர்களுக்குப் போட்டியாக இருக்கும்போது நிச்சயம் தள்ளிவிடத்தானே பார்ப்பார்கள். அதனாலேயே கட்சிக்கு எதிராக நான் செயல்படுவது போல், ‘குருமூர்த்தி கும்பல்… தி.மு.க ஸ்லீப்பர் செல்…’ என்று தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். இதையெல்லாம் தாண்டி மீண்டும் வருவேன்.

ஏனெனில், எனது புகார் தொடர்பாக ஒரு விசாரணை நடத்தக் கூட வாய்ப்பளிக்கப்படவில்லை. சம உரிமை கிடையாது. பெண்களுக்கு மரியாதையும் இல்லை.

அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களை யாருமே கண்டு கொள்ளவில்லை. உண்மையான தொண்டர்கள் அண்ணாமலையால் விரட்டியடிக்கப்படுவது தான் நடந்து கொண்டிருக்கிறது.

பா.ஜ.க-விற்கு என்னுடைய வாழ்த்துக்கள். நான் இந்த அவசர முடிவு எடுப்பதற்கு அண்ணாமலை தான் காரணம். இனி அவரைப் பற்றி பேசப் போவதில்லை. ஏனெனில் அவர் தரம் தாழ்ந்த தந்திரக்காரர்.

கடந்த எட்டு ஆண்டுகளாக என்னுடன் பணியாற்றிய அனைத்து தொண்டர்களுக்கும் எனது நன்றி. தமிழக பா.ஜ.க-வில் பெண்கள் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். மரியாதை இல்லாத இடத்தில் இருக்க வேண்டாம்.

அண்ணாமலையின் தலைமையில் பெண்களுக்கு எதிராக கடுமையான, அருவெறுப்பான, மோசமான தனிமனிதத் தாக்குதல் மேற்கொள்ளப்படுகிறது.

பெங்களூர் வார் ரூம் மூலம் இந்த தாக்குதல்கள் நடைபெறுவதாகவும், தமிழக காவல்துறை இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என்றும் பதிவிட்ட காயத்ரி ரகுராம், தற்போது கட்சியில் இருந்து தான் விலகுவதாகவும் டிவிட்டரில் அறிவித்துள்ளார்.

அண்ணாமலையை, “அதர்ம தலைவர் என்றும் மலிவான பொய்களை கூறும் தந்திரக்காரர்,” என்று தனது டிவிட்டர் பதிவில் காயத்ரி குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலையிடம் இருந்து சமூக நீதியை எதிர்பார்க்க முடியாது.

தேவை ஏற்பட்டால் தன்னிடம் இருக்கும் வீடியோக்களையும், ஆடியோக்களையும் காவல்துறையிடம் ஒப்படைத்து புகார் தர தயாராக உள்ளதாகவும் காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

போலீசாரிடம் புகார் பதிவு செய்ய தயாராக இருக்கிறேன். அண்ணாமலை மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர் ஒரு மோசமான பேர்வழி. எனக்கு எதிராக செயல்பட்டுவரும் வார் ரூம் பற்றியும் புகார் அளிப்பேன். நீதி தாமதிக்கப்படுவது என்பது அது மறுக்கப்படுவதற்கு சமம்”

காயத்ரி ரகுராமின் இந்த பதிவு குறித்து அண்ணாமலை இதுவரை எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.