லண்டன்: அடுத்த 2022ம் ஆண்டில், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள காமன்வெல்த் போட்டியில், பெண்கள் கிரிக்கெட் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், 2021ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி வரையிலான நிலவரப்படி, உலகத் தரவரிசைப் பட்டியலில் முதல் 6 இடங்களில் உள்ள அணிகள் தகுதிபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், காமன்வெல்த் போட்டி கிரிக்கெட்டிற்கு, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நேரடியாக தகுதிபெறுகிறது. அதேசமயம், இந்தப் பட்டியலில், தற்போதைய நிலையில், இந்திய அணி மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது.

கடந்த 1998ம் ஆண்டு, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில், ஆண்கள் கிரிக்கெட் இடம்பெற்றது. ஆனால், காமன்வெல்த்தில் பெண்கள் கிரிக்கெட் சேர்க்கப்படுவது இதுதான் முதன்முறை.

வரும் 2022ம் ஆண்டு, இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில், ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. காமன்வெல்த்தில் பெண்கள் கிரிக்கெட் அனுமதிக்கப்படுவதானது, பெண்கள் கிரிக்கெட் உலகளாவிய அளவில் வளர்வதற்கு துணைபுரியும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.