வாஷிங்டன்: அமெரிக்கா நாடாளுமன்ற கட்டிடத்தை அதிபர் டிரம்ப் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  இதையடுத்து காவல்துறையினர், வன்முறையாளர்களை நோக்கி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். துணை அதிபராக போட்டியிட்ட இந்திய வம்சவழியினரான கமலாஹாரிசும் வெற்றி பெற்றுள்ளார். இவர்கள் வரும் ஜனவரி 20-ஆம் தேதி  முறைப்படி பதவியேற்க உள்ளனர். இந்த விழாவில்   ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் அதற்கான சான்றை வழங்கும் நடைமுறை வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று ( வியாழக்கிழமை) நடைபெற்றது.

இதையறிந்த  அதிபர் டொனால்டு டிரம்பின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர்  திடீரென நாடாளுமன்ற கட்டிடம் முன்பு திரண்டனர்.  பலர் தடுப்புகளை மீறியும், சுற்றுச்சுவர் மீது ஏறியும்  நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, கூட்டத்தினரை கலைக்க, தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டு, அவர்கள்மீது ள் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி  கூட்டம் கலைக்கப்பட்டது. இருந்தாலும், அவர்கள்  கலைந்து செல்லாததால் தூப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இந்த துப்பாக்கிச் சூட்டி படுகாயமடைந்த பெண் ஒருவர் உயிரிழந்தார். வன்முறையாளர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற கட்டிட முற்றுகை போராட்ட வன்முறையை அடுத்து தேசிய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், அதிபர் டிரம்ப்  தனது ஆதரவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் பேசிய வீடியோக்கள் வெளியானதாக கூறப்படுகிறது. இது  பேஸ்புக், யூடியூப், டிவிட்டர்  உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் வேகமாக பரவியது. இதையடுத்து, அந்த வீடியோக்களை  டிவிட்டர், பேஸ்புக், யூடியூப் ஆகிய நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து உடனடியாக நீக்கின.

மேலும், விதிகளை மீறியதற்காக அதிபர் ட்ரம்பின் @realDonaldTrump பக்கத்தை தற்காலிகமாக 12 மணி நேரம் முடக்கியதாகவும், தொடர்ந்து வன்முறை மற்றும் தேர்தல் தொடர்பான தவறான தகவல்களை பரப்பினால் அவரின் @realDonaldTrump பக்கம் நிரந்தரமாக நீக்கப்படும் எனவும் ட்விட்டர் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.