டெல்லி: உடலுறவுக்கு சம்மதம் இல்லை என்று ஒரு பெண் கூறினால், அவள் அந்த செயலில் ஈடுபடவில்லை என்று தான் அர்த்தம் என்று உச்ச நீதிமன்றம் வழக்கு ஒன்றில் அதிரடியாக கூறியிருக்கிறது.
அண்மையில் பிரபல நடிகர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஒன்றில் நோ மீன்ஸ் நோ என்ற வசனம் வரும் (No means no). அதாவது ஒரு பெண் உடலுறவுக்கு சம்மதிக்கவில்லை என்றால் அதில் அவருக்கு விருப்பமில்லை என்று தான் அர்த்தம் என்று. அதுவே அந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது எனலாம்.
அதுபோன்றதொரு வழக்கில் உச்ச நீதிமன்றம், குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சம்மட்டி அடியாக அடித்திருக்கிறது. யு.யு.லலித், இந்து மல்ஹோத்ரா மற்றும் ஆர். சுபாஷ் ரெட்டி ஆகியோர் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பாலியல் தொடர்பான வழக்கு ஒன்றை தொடர்ந்தார். தமது நிறுவனத்தின் முதலாளி ஒருவர் தம்மை தொடர்ந்து பாலியல் இச்சைக்கு உட்படுத்தினார், அது தொடர்பான போட்டோக்களை காட்டி தம்மை பிளாக்மெயில் செய்தார்.
ஒருகட்டத்தில், தம்மைத் தான் திருமணம் செய்து கொள்ள போகிறார் என்ற தோற்றத்தை ஏற்படுத்தினார் என்று வழக்கில் குறிப்பிட்டிருந்தார். அதனை விசாரித்த குஜராத் மாநில நீதிமன்றம், அந்த வழக்கை தள்ளுபடி செய்தது.
மனுதாரர், குற்றம்சாட்டப்பட்டவரிடம் இருந்து ஒரு தொகையை பலனாக பெற்றிருக்கிறார் என்று கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்து ஆணையிட்டது. இதையடுத்து, அந்த பெண் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியிருக்கிறார்.
அந்த மனுவில், தம்மிடம் மிரட்டி தான் பணப்பலன்களை அளிக்க குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு முன்வந்தது. முற்றிலுமாக மிரட்டப்பட்டதாக தெரிவித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குஜராத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு சாட்டையடி வழங்கி இருக்கிறது.
தமது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதாவது: மனுதாரரின் வழக்கில், போகிற போக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பை அளித்திருக்கிறது. எனவே, இதை மீண்டும் ஆழமாக விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணை பணப்பலன்கள் பெற மிரட்டியது என்ற புகார் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும்.
அந்த பெண்ணின் திருமண நிச்சயத்தார்த்தம் தொடர்பான அனைத்து தொலைபேசி அழைப்புகளும் ஆராயப்பட வேண்டும். வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர் உரிய விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது.