ஆழ்துளைக் கிணறு விபத்து : அமெரிக்கர்கள் கற்ற பாடத்தில் இருந்து நாம் விழிப்புணர்வு பெறுவோமா?

Must read

டெக்ஸாஸ்

மெரிக்காவில் கடந்த 1987 ஆம் ஆண்டு சுஜித் வில்சனைப் போல் ஒரு சிறுமி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள ஒரு சிற்றூரில் மூடப்படாத ஆழ்துளைக் குழாய்க் கிணற்றில் சுஜித் வில்சன என்னும் 2 வயதுச் சிறுவன் தவறி விழுந்தான்   அவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றும் சிறுவன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டான்.  இது தமிழக மக்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியது.   இதைப் போல் அமெரிக்காவில் 1987 ஆம் ஆண்டு நடந்த ஒரு நிகழ்வைப் பற்றிப் பார்ப்போம்

கடந்த 1987 ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள மிட்லண்ட் என்னும் பகுதியில் இருந்த மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றில் ஜெசிகா என்னும் ஒன்றரை வயதுப் பெண் குழந்தை விழுந்து விட்டார். அக்டோபர் மாதம் 14 ஆம் நாள் 8 அடி விட்டம் மற்றும் 22 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த அவரை மீட்க கடும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

ஜெசிகாவை அவர் விழுந்த அதே வழியாக மேலே எடுத்துவர செய்யப்பட்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.  ஆகவே அந்நாட்டு தீயணைப்பு படை வீரர்கள் பக்கவாட்டில் குழி ஒன்றைத் தோண்டி அவரை மீட்டு வர முயற்சி செய்தனர்.  அந்தப் பகுதியில் கடுமையான பாறைகள் இருந்ததால் பணி மிகவும் தாமதம் ஆனது.   பதட்டத்தில் ஆழ்ந்த அமெரிக்கர்கள் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர்.

அப்போதைய அமெரிக்க அதிபரான ரொனால்ட் ரீகன் மக்கள் அனைவருமே ஜெசிகாவின் பெற்றோர் எனவும் அவரை மீட்கப் பிரார்த்தனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.  எண்ணெய் கிணறு தோண்டப் பயன்படும் இயந்திரங்களும் வாட்டர் ஜெட் எனப்படும் நீர் சக்தி கருவியும் கொண்டு பாறைகள் வெட்டப்பட்டன.  ஜெசிகா விழுந்த கிணற்றுக்குப் பக்கவாட்டில் 30 அங்குல விட்டத்தில் 29 அடி ஆழத்துக்கு ஒரு குழி 48 மணி நேரத்தில் அமைக்கப்பட்டது.

அங்கிருந்து பக்கவாட்டில் சுரங்கம் ஒன்றை அமைத்த தீயணைப்புப் படை வீரர் ஜெசிகாவை உயிருடன் மீட்டு வந்ததைத் தொலைக்காட்சி வழியாக நேரலையில் கண்ட அமெரிக்கர்கள் மிகவும் மனம் மகிழ்ந்தனர்.  சுமார் 58 மணி நேரத்தில் நடந்த இந்த மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு ஜெசிகாவுக்கு மருத்துவமனையில் 15 அறுவை சிகிச்சைகள் நடந்து அவர் உயிர் பிழைத்தார்.

ஜெசிகாவை மீட்கும் புகைப்படத்துக்கு புலிட்சர் விருது கிடைத்தது.  கடந்த 1989 ஆம் ஆண்டு அவருக்கு அமெரிக்க அதிபர் புஷ் விருந்து அளித்து மகிழ்ந்தார்.  ஜெசிகா தற்போது ஆரம்பப் பள்ளி ஆசிரியையாகப் பணி புரிந்து வருகிறார்.  அவருக்குத் திருமணமாகி ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

அதற்குப் பிறகு அமெரிக்கர்கள் திறந்து இருக்கும் அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் இரும்பு மூடி கொண்டு மூடினார்கள்.  அந்த மூடிகளில் ஜெசிகாவுக்கு நடந்த விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது அமெரிக்கர்களின் விழிப்புணர்வுக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.  அதன் பிறகு இதைப் போல் விபத்துக்கள் நடக்கவில்லை.

தற்போது சுஜித் வில்சன் மரணத்துக்குப் பிறகு அமெரிக்கர்களைப் போல் நமக்கும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.,  இன்னொரு சுஜித் வில்சனுக்கு இந்நிலை ஏற்படக் கூடாது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.   மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூடும் பணியில் மக்கள் அனைவரும் ஈடுபட வேண்டும் எனப் பத்திரிகை.காம் வேண்டிக் கொள்கிறது.

More articles

Latest article