சென்னை: அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அஜராக்கிரதை தொடர்கதையாகி வருகிறது. மருத்து வர்களின் அலட்சியம் காரணமாக, சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்  இதய சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு,  வலது கையை அகற்றி யிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மருத்துவமனை டீன் விளக்கம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கடந்த சில மாதங்களக்கு முன்பு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வந்த ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்டு, பின்னர் தொடர் சிகிச்சை பலன் அளிக்காமல் அக்குழந்தை உயிரிழந்த நிலையில், தற்போது ஒரு பெண்ணின் கை அகற்றப்பட்டு இருப்பது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் ஜீனாத் என்வரின் மனைவி ஜோதி (வயது32). இருதுக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி இருந்ததால், அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர், மேல் சிகிச்சைக்காக கடந்த 15-ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஜோதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள்  ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்துள்ளனர். இதில் இதயத்தில் ரத்தநாள அடைப்பு பெரிய அளவில் இல்லை என்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த அந்த பெண்ணுக்கு ஆஞ்சிகிராம் செய்த வலது கை மற்றும் கால்கள் ரத்த ஓட்டம் இன்றி கருப்பு நிறத்தில் மாறத்தொடங்கியது. இதுகுறித்து அவரது உறவினர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் தெரிவித்து உள்ளனர். ஆனால், முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற கூறப்படுகிறது. இதனால்,  ரத்த உறைதல் காரணமாக அந்த பெண்ணின் வலது கையும் இரண்டு கால்களும் மேலும் கருப்பு நிறத்தில் மாறிவிட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த  மருத்துவர்கள், அந்த பெண்ணின்  உயிரைக் காப்பாற்றுவதற்காக, அந்த பெண்ணின்  வலது கையை அகற்றிவிட்டனர். இது சர்ச்யையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கூறிய அந்த பெண்ணின் கணவர் ஜீனத்,   “தனியார் மருத்துவமனையில் ஆஞ்சியோகிராம் செய்ய அதிக கட்டணம் என்பதால் அரசு மருத்துவ மனைக்கு வந்தோம். இங்கு இதய ரத்த நாள பாதிப்பு இல்லை என்று டாக்டர்கள் சொன்னார்கள். ஆனால், கை கால்களில் ரத்தம் உறைதல் ஏற்பட்டிருப்பதாகக் கூறி வலது கையை அகற்றியுள்ளனர். ரத்தம் உறைதல் சீராகவில்லை என்றால், இடது காலையும் அகற்ற வேண்டும் என்கிறார்கள்”  “இதய பரிசோதனைக்காக வந்தால், கை, கால்களை அகற்றுகிறார்கள். டாக்டர்கள், தவறான மருந்தைக் கொடுத்திருக்க வேண்டும் அல்லது சிகிச்சையில் கவனக்குறைவான இருந்திருக்க வேண்டும். எப்படி இருந்தாலும் எங்களுக்கு நியாயம் வேண்டும்” எனவும் அவர் தெரிவிக்கிறார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மருத்துவமனை டீன் தேரணிராஜன் , “இதய நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அப்பெண்ணுக்கு 2 நாட்கள் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் செய்யப்பட்டது. அவரது கையில் வீக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், ரத்தநாள அடைப்பு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் இல்லாத நிலையில், அவருக்கு ரத்த உறைதல் நோய்தான் நெஞ்சு வலிக்குக் காரணம் என்பது கண்டறியப்பட்டது.

வலது கை ரத்த உறைவினால் செயலிழந்து விட்டதால், முழங்கைக்கு மேல் வரை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது, இதயவியல், ரத்தநாள அறுவை சிகிச்சை நிபுணர், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” என்றார்.

2 மாதங்களுக்கு முன் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ஒன்றரை வயது ஆண் குழந்தையின் வலது கை கறுப்பாக மாறியதுடன் செயலிழந்தது. பின்னர், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தை மாற்றப்பட்டது. அங்கு குழந்தையின் வலது கை தோல் பட்டை வரை அகற்றப்பட்டது. தொடர் சிகிச்சையிலிருந்த வந்த அக்குழந்தை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மீது அடுத்தடுத்து வரும் குற்றச்சாட்டுக்கள் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.