சென்னை: தனியார் வாகனங்களில் அரசு முத்திரை இருந்தால்  கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர்  ஒருவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், விதிகளுக்கு புறம்பாக தனியார் வாகனங்களில் அரசு முத்திரைகளை அmதிக அளவில் காணப்படுகின்றன. அதன்பேரில் முறைகேடுகளும் நடைபெறுகிறது. இதனால், தனியார் வாகனங்களில் அரசு முத்திரைகள் பதிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்ததார்.

தமிழகத்தில் தனியார் வாகனங்களில், அரசு வாகனங்களுக்கு குறிப்பிடும் ‘G’ என ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாகவும், ‘இந்திய அரசு’, ‘தமிழ்நாடு அரசு’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் கூறி, சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் கிருத்திகா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.அந்த மனுவில், அரசு சின்னங்களையும், தமிழ்நாடு அரசு, இந்திய அரசு என வாகனங்களில் ஸ்டிக்கர்க்ளை ஒட்டிக் கொண்டு விதிமீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த மனுமீது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபூர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு விசாரணை நடத்தியது.  முதல்கட்ட விசாரணையின்போது, இதுபோன்ற விதிமீறல்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இதையடுத்து வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர், விதிகளுக்கு புறம்பாக தனியார் வாகனங்களில் அரசு முத்திரைகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள்,  விதிகளை மீறி செயல்படும் வாகனங்கள் மீதான நடவடிக்கை என்பது ஒரு தொடர் நடைமுறை என்பதால், இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும்படி அரசுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்தனர்.