வேலூர்: நேருக்கு நேர் மோத திராணி தெம்பு இல்லாத தி.மு.க. அரசு, அதிமுக கூட்டங்களில்,  நோயாளி இல்லாத ஆம்புலன்சை கொண்டு கேவலமான செயல்களில் ஈடுகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடியுள்ளார்.

வேலூரில் எடப்பாடி பழனிச்சாமி பேசிக்கொண்டிருந்த அதிமுக  கூட்டத்திற்கு நடுவே இடையூறாக வந்த ஆம்புலனசால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த 108 ஆம்புலன்சில்  நோயாளிகள் இல்லாத நிலையில், வேண்டுமென்றே கூட்டத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் நோக்கில் வந்த  ஆம்புலன்ஸ்  ஓட்டுநரை   எதிர்க்கட்சி தலைவருமான  எடப்பாடி பழனிசாமி கடுமையாக எச்சரித்தார். மேலும், இனிமேலும் இவ்வாறு நடந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்  என்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் நோயாளி ஆகிவிடுவார்  என்றும் கூறினார்.

 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே களப்பணியாற்றி வருகின்றன. அதன் ஒருபகுதியாக அதிமுக பொதுச்செயலாளரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அவரது பயணம் தற்போது வேலூர் மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது.  வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொள்ள வந்த எடப்பாடி பழனிச்சாமியை வேலூர்  புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் மற்றும் கட்சியினர் வரவேற்றனர். இரவு 10.30 மணி அளவில் அணைக்கட்டு எம்.ஜி.ஆர். சிலை அருகே ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசத் தொடங்கிய போது மக்கள் கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதனால் கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்கள், அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. உடனே சிலர்  அந்த ஆம்புலன்சில்  ஏறி பார்த்தபோது, அதில் நோயாளி இல்லை என்பதும், ஓட்டுநர் மட்டுமே  வந்ததும்  தெரிய வந்தது.

ஆம்புலன்சில் நோயாளி இருப்பதுபோல, விளக்குகளையும், சைரனையும் போட்டுக்கொண்டு வந்த ஆம்புன்சை பார்த்து  கோபமடைந்த எடப்பாடி பழனிச்சமி அந்த ஆம்புலன்ஸ் டிரைவரை எச்சரித்து அனுப்பினார். தொடர்ந்து பேசியவர்,   , தி.மு.க. அரசு வேண்டும் என்றே ஒவ்வொரு கூட்டத்திலும் இது போன்ற நோயாளி இல்லாத ஆம்புலன்ஸ்களை விட்டு இடையூறு செய்கிறது என்று விமர்சித்தவர், இதுபோன்ற இழிசெயல்களால்  மக்களுக்கு ஏதாவது ஏற்பட்டால் யார் பொறுப்பு?.  , “என்னுடைய ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் திட்டமிட்டே ஆம்புலன்ஸ் விடுகிறார்கள். மக்கள் நடுவே கலாட்டா செய்யும் இந்த கேவலமான அரசாங்கத்துக்கு ‘தில்’ இருக்க வேண்டும். அரசியல் ரீதியாக எதிர்க்கட்சிகளை எதிர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஆம்புலன்ஸ்களை அனுப்பி தொந்தரவு செய்கிறார்கள்.இப்படி ஆயிரம் ஆம்புலன்ஸ் விட்டாலும், மக்கள் மனதை அவர்களால் மாற்ற முடியாது.

நான் இதுவரை  பேசிய 30 கூட்டங்களிலும் ஆம்புலன்ஸ்கள் வந்து இடையூறு செய்துள்ளது என்றவர்,  அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார் என எச்சரிக்கை விடுத்ததுடன்,  இதுகுறித்து காவல் துறையில் நிர்வாகிகள் புகார் அளிக்க வேண்டும் என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பும், பரபரப்பும் ஏற்பட்டது. இதையடுத்து உடனே ஆம்புலன்ஸ் டிரைவர் ஆம்புலன்சை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஒடினார்.

தொடர்ந்து பேசியவர்,  மக்களை துன்புறுத்தும் ஆட்சிதான் திமுக ஆட்சி. திராவிட மாடல் ஆட்சியால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. உணவுப்பொருட்கள், கட்டுமானப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்ததுதான் மிச்சம். மணல் விலை 200 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகட்ட முடியாமல் திணறுகிறார்கள். சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுகிறது. சாக்லேட்டில் கூட போதைப்பொருள் கலந்துள்ளது. இதனால் மாணவர்கள் சீரழிகிறார்கள்.

ஆனால், அதிமுக ஆட்சியில் மக்களுக்கான நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. விவசாயிகளுக்கு 3 படை மின்சாரம் வழங்கப்பட்டது. தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிக் கடன்கள் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டன. பயிர் பாதிப்புகளுக்கு அதிக காப்பீடு நிதி வழங்கப்பட்டது. பல வேளாண் திட்டங்களால் உணவு உற்பத்தியில் தேசிய விருது பெற்ற ஒரே ஆட்சி அதிமுக ஆட்சிதான்

11 அரசு மருத்துவக் கல்லூரிகளும், பல கலை மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளும் அதிமுக ஆட்சிகாலத்தில் உருவாக்கப்பட்டன. எனது தலைமையிலான ஆட்சியில் அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளும் உடனுக்குடன் தீர்த்து வைக்கப்பட்டன. பாலங்கள், சாலைகள் என உள்கட்டமைப்புகள் பல மடங்கு மேம்படுத்தப்பட்டது.

திமுக தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கிய திமுக அரசு, எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை.

ஆனால், அதிமுக அப்படி அல்ல. நாங்கள் சொல்வதை செய்வோம். செய்வதை தான் சொல்வோம். அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, ஏழைகள், விவசாயிகள் நலனுக்காக பல அற்புதமான திட்டங்களை அதிமுக அறிவிக்கப் போகிறது. மக்களுக்கு நன்மை கிடைக்க வேண்டுமென்றால், அதிமுக ஆட்சி தமிழகத்தில் இருக்க வேண்டும். இது மக்களுக்கு நன்றாக தெரியும். அதிமுகவை ஆட்சியில் அமர்த்துங்கள். உங்கள் பிரச்சினைகள் அனைத்தையும் நாங்கள் தீர்த்து வைக்கிறோம். அடுத்த தேர்தல், தமிழகத்துக்கு உண்மையான விடியலாக இருக்க வேண்டும்” என எடப்பாடி பழனிசாமி கூறினார்.