லாகூர்: ரசிர்களின் திருவிழாவான உலகக்கோப்பைத் தொடரை, அவர்கள் இல்லாமல் நடத்துவதைவிட, ஒத்திவைப்பதே மேலானது என்று கருத்து தெரிவித்துள்ளார் ‘சுல்தான் ஆஃப் ஸ்விங்’ வாசிம் அக்ரம்.

வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில், ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி-20 உலகக்கோப்பைத் தொடர் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்படலாம் என்று செய்திகள் உலா வருகின்றன.

அதேசமயம், கொரோனா அச்சம் காரணமாக, அத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில், கருத்து தெரிவித்துள்ள வாசிம் அக்ரம், “உலகக் கோப்பை என்பது ரசிகப் பெருமக்களின் திருவிழா. தத்தம் அணிக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, உலகின் பல பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் போட்டியைக் காண வருகை தருவார்கள்.

அவர்கள் இல்லாமல் போட்டித் தொடரை எப்படி நடத்த முடியும்? அதில் எந்த சுவாரஸ்யமும் இருக்க முடியாது. எனவே, சகஜ நிலை திரும்பும் வரை காத்திருந்து, போட்டித் தொடரை நடத்துவதே சரியான முடிவாக இருக்கும்.

பந்தை பளபளப்பாக்க, எச்சிலைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை குறித்து நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும். ஏனெனில், அதை வேகப்பந்து வீச்சாளர்கள் விரும்பமாட்டார்கள்” என்றுள்ளார்.