சென்னை

டந்த 7 மாதங்களில் சமையல் எரிவாயு விலை ரூ.240 உயர்ந்துள்ளது.

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையைத் தினமும் மாற்றி அமைக்க மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்துள்ளது.  சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படைகளில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதைப் போல் சமையல் எரிவாயு விலை மாதத்துக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.   ஆயினும் அது ஒவ்வொரு மாதமும் பல முறை மாற்றப்படுகிறது.   கடந்த 7 மாதங்களில் சமையல் எரிவாயு விலை ரூ.240 உயர்த்தப்பட்டு இருப்பது புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

சென்ற ஆண்டு நவம்பர் மாதம் வரை ரூ. 610 ஆக இருந்த சமையல் எரிவாயு விலை, டிசம்பர் 2ம் தேதி அன்று 50 ரூபாய் உயர்த்தப்பட்டது. மீண்டும் 13 நாட்கள் இடைவெளியில் டிசம்பர் 15ம் தேதி அன்று மேலும் 50 ரூபாய் உயர்த்தப்பட்டதை அடுத்து, எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 710 ஆக அதிகரித்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முழுவதும் சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

பிறகு பிப்ரவரி மாதம் மட்டும் 3 முறை விலை உயர்த்தப்பட்டது. பிப்ரவரி 4ம் தேதி அன்று 25 ரூபாய் அதிகரித்து, சிலிண்டர் விலை ரூ. 735ஆக விற்பனை செய்யப்பட்டது. மீண்டும் அதே மாதத்தில் 15ம் தேதி அன்று மேலும் ரூ. 50 உயர்த்தப்பட்டு, ரூ. 785க்கு விற்பனையானது. பிறகு பிப்ரவரி 15ம் தேதி அன்று கேஸ் சிலிண்டர் விலை மேலும் 25 ரூபாய் அதிகரிக்கப்பட்டது.  இதற்கு எதிரான குரல்கள் வலுக்கத் தொடங்கிய நிலையில்,அடுத்த 4 நாட்களில் மீண்டும் விலை உயர்ந்தது.

சென்ற மார்ச் 1ம் தேதி அன்று சிலிண்டருக்கு மேலும் ரூ. 25ஐ உயர்த்தி ரூ. 835க்கு விற்பனை ஆனது. இதனையடுத்து எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, கடந்த ஏப்ரல் 1ம் தேதி எரிவாயு சிலிண்டர் விலை ரூ.10 குறைக்கப்பட்டது. அதன்பின்னர் கடந்த 3 மாதங்களாக விலை உயர்த்தப்படாத நிலையில், தற்போது சமையல் எரிவாயு விலை மீண்டும் ரூ.25 உயர்ந்து ரூ. 850க்கு விற்பனை ஆகி உள்ளது.