ராஜ்கோட்
ராஜ்கோட் பகுதியில் உள்ள ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் கடந்த 45 நாட்களில் 10000 க்கும் மேற்பட்டோர் பணி இழந்துள்ளனர்.
இந்தியாவில் வாகன விற்பனை மிகவும் குறைந்து வருகிறது. இதனால் பல புகழ்பெற்ற வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தியை பெருமளவில் குறைத்துள்ளன. இந்த தொழிற்சாலைகளில் பணி புரியும் பல தற்காலிக மற்றும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு பணி அளிக்கப்படாமல் உள்ளது. பல தொழிற்சாலைகளில் வேலை நாட்கள் குறைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலை இந்த தொழிற்சாலைகளை நம்பி உள்ள நிறுவனங்களுக்கும் உண்டாகி இருக்கிறது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் பல ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் உள்ளன. இவைகள் அனைத்தும் உதிரி பாகங்கள் தயாரித்து அவற்றை வாகன உற்பத்தியாளர்களுக்கு அளித்து வருகின்றன. வாகன உற்பத்தி நிறுவனங்கள் தற்போது உதிரிபாக கொள்முதலை முழுவதுமாக நிறுத்தி உள்ளன.
இதனால் ராஜ்கோட்டில் உள்ள பல தொழில் நிறுவனங்கள் தங்கள் பணி நாட்களை குறைத்துள்ளன. ஏற்கனவே தயார் செய்யப்பட்ட பாகங்கள் விற்பனை ஆன பிறகே புதிய உற்பத்தியை தொடங்க உள்ள நிலையில் உள்ளதாக இந்த பகுதி தொழிலதிபர் பரேஷ் வசானி தெரிவித்துள்ளார். இவரது நிறுவனம் மூன்ரு ஷிஃப்டுகள் இயங்கிய நிலையில் தற்போது ஒரு ஷிஃப்ட் மட்டுமே இயங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த 45 நாட்களில் இந்த நிறுவனங்களில் பணி புரிந்த ஊழியர்களில் 10000 க்கும் மேற்பட்டோர் பணி இழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கடந்த 3 மாதங்களுக்குள் பணியில் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இதைத் தவிர இவர்களுக்கு பணி புரியும் ஒப்பந்ததாரர்களின் சிறு தொழில்களும் முழுமையாக முடங்கி உள்ளது.