மும்பை:

மும்பை விமான நிலையத்தில் ஓடு பாதையில் இருந்து விமானம் விலகி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.விமானம் விபத்தில் சிக்காததால், அதிர்ஷ்டவசமாக  அதில் பயணம் செய்த விமான பயணிகள் உயிர் தப்பினர்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வரலாறு காணாத மழை பொழிந்து வருகிறது. கடந்த 3 நாட்களாக  பெய்துவரும் பேய் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மும்பை நகரமே தண்ணீரில் மிதக்கிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர்  மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கனமழையால் பஸ், ரெயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நள்ளிரவு 11.45 மணியளவில் ஜெய்ப்பூரில் இருந்து மும்பை வந்த ஸ்பைஸ்ஜெட் எஸ்ஜி-6237  விமானம் பிரதான ஓடுபாதையில் தரையிறங்கியபோது, நிற்க வேண்டிய இடத்தில் நிற்காமல் ஓடுபாதையை விட்டு விலகிச்சென்றது. இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

விமான ஓடுதளத்தில் இருந்த ஈரம் காரணமாக, விமானத்தின் டயர் விலகி சென்றதாகவும், அதே நேரத்தில் அருகில் வேறு விமானம் ஏதும் இல்லாத நிலையில் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விமானத்தில் இருந்து பயணிகள் அவசரம் அவசரமாக பத்திரமாக தரை யிறக்கப்பட்டனர். அதைத்தொடர்ந்து சர்ச்சைக்குரிய விமான ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டது.

மும்பை விமான நிலைய விமான ஓடு பாதைகள் முழுவதும் தண்ணீரில் மிதப்பதால், மும்பை வர இருந்த சுமார் 54 விமானங்கள் மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.