சென்னை:
“தேர்தலில் தோற்றாலும் எங்கள் நோக்கம் தொலை நோக்கு கொண்டது. எங்களது இலக்கில் எந்த மாற்றமும் இல்லை. அத்துமீறல்களால் மக்களின் விருப்பத்திற்கு எதிராக தமிழகத்தில், ஒரு அரசு அமைந்துள்ளது” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
“விடுதலை சிறுத்தைகள் தேர்தல் பொறுப்பு குழு கூட்டம் இன்று நடக்க இருக்கிறது. அதில், தேர்தல் தோல்விக்கான பிற காரணங்கள் குறித்து ஆலோசிப்போம்.
சட்டசபை தேர்தல் நேர்மையாக நடைபெறவில்லை. அனைத்து வகை முறைகேடுகளுக்கும் நடுவே விடுதலை சிறுத்தை கட்சி பெரும் வாக்கு பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
தேர்தலில் தோற்றாலும் எங்கள் நோக்கம் தொலை நோக்கு கொண்டது. எங்களது இலக்கில் எந்த மாற்றமும் இல்லை. அத்துமீறல்களால் மக்களின் விருப்பத்திற்கு மாறாக தமிழகத்தில், ஒரு அரசு அமைந்துள்ளது.
download
ஆர்.கே.நகர், திருவாரூர், கொளத்தூர் போன்ற திமுக, அதிமுக கட்சிகளின் முக்கிய தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் நூறு விழுக்காடு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. பல களம் கண்ட அந்த தலைவர்களே வாக்குகளுக்கு பணம் கொடுத்துதான் வெற்றிபெற  வேண்டிய நிலை இருப்பது கவலை அளிக்கிறது.  தமிழகம் எங்கே போய் கொண்டுள்ளது என்ற கவலை ஆட்கொள்கிறது.
மக்களுக்கு பணத்தை கொடுத்து, அவர்கள் மீதும் ஊழல் கறையை பூசியுள்ளன இக் கட்சிகள். ஆனாலும்  ஜெயலலிதாவுக்கு விடுதலை சிறுத்தைகள் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.
500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். ஆனால் மூடப்பட போகும் கடைகள் ஏற்கனவே, விற்பனை மந்தமான கடைகள் என்று சொல்லப்படுகிறது. பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகளை திறக்க ஜெயலலிதா அறிவித்துள்ளார். ஆனால், மாலை 5 மணிக்கு மேல் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் வேண்டுகோள் வைக்கிறது.  மேலும், 2 ஆண்டுகளுக்குள் டாஸ்மாக் கடைகளை முழுவதுமாக மூடுவதற்கு முதல்வர் உறுதியளிக்க வேண்டும்” என்று திருமாவளவன் தெரிவித்தார்.