சென்னை:

துக்ளக் விழாவில் கலந்துகொண்ட ரஜினி, முரசொலி மற்றும் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை உருவாக்கி உள்ளது.  ரஜினியின் பேச்சுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலினும், ரஜினியை மறைமுகமாக விமர்சித்து வருகிறார்.

இதன் காரணமாக ரஜினியின் புதிய படம் விநியோக உரிமை, இனிமேலும் உதயநிதிக்கு கிடைக்குமா என்பது குறித்து திரையுலகில் பரபரப்பு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

திரையுலகில் சில படங்களில் நடித்தும், சில படங்களை தயாரித்தும், பல படங்களை விநியோகம் செய்தும் தொழில் நடத்தி கல்லா கட்டி வருபவர் உதயநிதி ஸ்டாலின். திமுக கட்சியில் பொறுப்புக்கு வந்த பிறகு, மாற்று கட்சியினரின் அரசியல் நடவடிக்கைகளையும் விமர்சித்து வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்திய ரஜினியின் பேச்சு குறித்தும் விமர்சித்து டிவிட் பதிவிட்டிருந்தார்.

“முதல்வர்னா முத்தமிழறிஞர், தலைவன்னா புரட்சித் தலைவன், தைரிய லெட்சுமினா அம்மா கால் நூற்றாண் டாக கால் பிடித்து காலம்கடத்தி ‘தலைசுத்திருச்சு’ என நிற்கும் காரியக்காரருக்கு மத்தியில், முரசொலியை கையிலேந்தி, பகுத்தறியும் சுயமரியாதைக் காரனே தி.மு.க.க்காரன். நான் தி.மு.க.க்காரன்’’ எனப் பதிவிட்டார்.

இது பரபரப்பை ஏற்படுத்தியது. ரஜினியின் படத்தை விநியோகம் செய்து சம்பாதித்து வரும் உதயநிதி ஸ்டாலின், ரஜினி குறித்து விமர்சித்தது  திரையுலகிலும் எதிரொலித்தது.

உதயநிதி ஸ்டாலின் ரஜினி குறித்து மறைமுகமாக தாக்கி டிவிட் பதிவிடுவதாக சமுக வலைதளங்களிலும் விமர்சனம் எழுந்தது.

இந்த பரபரப்பான சூழலில், சைக்கோ படத்தின் புரமோ‌ஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் உதயநிதி, இணையதளம் ஒன்றின் கேள்விக்கு பதில் அளித்தபோது, நான் ரஜினியை குறிப்பிட்டு டிவிட் போடுகிறேன் என்று எப்படி சொல்ல முடியும் என்று எதிர் கேள்வி எழுப்பியவர், ரஜினி இதுவரை அரசியலுக்கு வரவில்லையே, முதலில், அவர் அரசியலுக்கு வரட்டும். அதன் பிறகு நான் இந்த கேள்விக்கான பதிலைச் சொல்கிறேன்” என  தெரிவித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தொடர் டிவிட்கள், அவரின் திரையுலக தொழிலை பாதிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசான கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ரஜினியின் பேட்ட படத்தின் விநியோக உரிமையை உதயநிதி ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம்,கைப்பற்றி, கோடிக்கணக்கில் சம்பாதித்தது. ஆனால், தற்போது ரஜினிமீது உதயநிதி தொடர்ந்து விமர்சித்து வருவது,

ரஜினி நடித்து வரும் மற்ற படங்களின் விநியோக உரிமை உதயநிதியின் நிறுவனத்துக்கு கிடைக்குமா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளது.

ஆனால், இதுகுறித்து கூறிய உதயநிதி ஸ்டாலின், ரஜினி படத்தை விநியோகம் செய்வேன் என்று வெளிப்படையாகவே கூறினார். இதில் ரஜினிக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்றவர், அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லாதபோது, பிறகு எனக்கு ஏன்  என்று தெரிவித்து உள்ளார்….