சென்னை,
பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இணைந்த அதிமுக ஓபிஎஸ்இபிஎஸ் அணியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தினகரனுக்கு எதிராக 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதைத்தொடர்ந்து பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்குவது குறித்து முடிவு எடுக்கும் விதத்தில் செப்டம்பர் 12ந்தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுகவின் இரு அணியினரையும் சேர்ந்தவர்கள் டில்லியில் முகாமிட்டுள்ளனர்.
அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக அதிமுக பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது.
இந்நிலையில், இரு அணிகளும் தற்போது இணைந்து விட்டதால், இரட்டை இலை, மற்றும் கட்சியைக் கைப்பற்றும் முயற்சியில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். அணியினர் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக ஓ.பன்னீர் செல்வம் அணி சார்பில் எம்.பி. மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், எடப்பாடி அணி சார்பாக அமைச்சர்கள் பி.தங்கமணி, ஜெயக்குமார் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் நேற்று இரவு டில்லிக்குப் புறப்பட்டு சென்றனர்.
இன்று காலை 11 மணி அளவில் இந்தியத் தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து, அணிகள் இணைந்தது தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்ய உள்ளனர். அப்போது, அதிமுக கட்சியையும், இரட்டை இலையையும் தங்களுக்கு ஒதுக்க கோரியும் மனு கொடுக்கின்றனர்.
பின்னர், இரு அணியினரும் தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை வாபஸ்பெறவும் முடிவு செய்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் இணைந்துள்ள அணியினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டால் கட்சியும் தானாகவே அவர்களுக்குக் கிடைத்து விடும்.
சசிகலாவின் அதிமுக பொதுச்செயலாளர் நியமனம் செல்லாது என்று தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனால் தினகரன் அணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நடக்க இருக்கும் பொதுக்குழுவை தடுக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.