புதுச்சேரி: மாநிலத்தில் அமைச்சர்கள் பதவி ஏற்று 15 நாட்கள் ஆன நிலையில், இன்னும் இலாகாக்கள் ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் இரு கட்சிகளுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளதால், பாஜக என்ஆர்.சி கூட்டணி அரசில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இதனால் என்.ஆர்.ரங்கசாமி தலைமையிலான அரசு கவிழும் சூழல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் கடும் இழுபறிக்கு பிறகு கடந்த மாதம், 5 மந்திரிகள் பதவி ஏற்றும், இன்னும் அவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படாத அவலம் நீடித்து வருகிறது. கூட்டணி கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் இடையே தொடரும் அதிகார பகிர்வு மோதல் காரணமாக மாநில அரசு ஸ்தம்பித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், பாஜக என்.ஆர்.காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், பாஜக 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நிலையில், என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி கடந்த மே 7ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து ரங்கசாமி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதால் அமைச்சர்கள் நியமிக்கப்படாத நிலை ஏற்பட்டது. இதை பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்தி, 3 பாஜகவினரை நியமன எம்எல்ஏக்களாக அறிவித்தது. இதனால் பாஜகவின் பலம் 9 ஆக அதிகரித்தது. இதைக்காட்டி, துணைமுதல்வர் உள்பட அமைச்சர்கள் பதவிகளை கேட்டு முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்குதல் கொடுத்து வந்தது.
இதுதொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையே பலகட்ட பேச்சு வார்தைகள் நடைபெற்று முடிந்து, முக்கிய நீண்ட இழுபறிக்கு பிறகு கடந்த 23ஆம் தேதி 5 பேர் கொண்ட அமைச்சரவை பட்டியலை முதல்வர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் பொறுப்பு வகிக்கும் தமிழிசை சௌந்தரராஜனிடம் வழங்கினார். அதில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு மூன்று அமைச்சர் பதவிகளும், பாரதிய ஜனதா கட்சிக்கு இரண்டு அமைச்சர் பதவிகளும் ஒதுக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து ஜூன் 26ஆம் தேதி அன்று பிற்பகல் சுமார் 2.30 மணியளவில் புதிய அமைச்சரவை பதவியேற்றது. அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 5 அமைச்சர்களுக்கும் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அமைச்சர்களாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த லட்சுமி நாராயணன், ஜெயக்குமார் மற்றும் சந்திர பிரியங்கா ஆகியயோர் இடம் பெற்றுள்ளனர். பாஜக சார்பில் நமச்சிவாயம் மற்றும் சாய் சரவணன் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
அமைச்சர்கள் பதவி ஏற்று 15 நாட்கள் ஆன நிலையில், இன்னும் அவர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்படாமல் உள்ளது. முக்கிய இலாக்காக்களை பாஜக அமைச்சர்கள் கேட்பதால், இரு கட்சிகளும் இடையே மீண்டும் லடாய் ஏற்பட்டுள்ளது. பாஜக கேட்கும் இலாகாக்களை ஒதுக்க முதல்வர் ரங்கசாமி மறுத்து பிடிவாதம் காட்டுவதால், நட்பு கட்சிகளுக்கு இடையே பிளவு அதிகரித்து வருகிறது. பாஜக அமைச்சர்கள் என்.ரங்கசாமியால் ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இரு கட்சிகளும் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் தவித்து வருகின்றன.
புதுச்சேரி மாநில அரசியல் வட்டாரத் தகவல்களின்படி, பாஜக தலைமை, மத்திய தலைமையின் ஒப்புதலுடன், மாநில அமைச்சர்களுக்கு பொதுப்பணி, உள்ளூர் நிர்வாகம், கலால் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட 10 இலாகாக்களை கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதை முதல்வர் ரங்கசாமி ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
முக்கிய துறைகளை பாஜகவுக்கு வழங்கினால், அமைச்சரவையில் உள்ள மூன்று என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் குறைந்த முக்கியத்துவம் வாய்ந்த இலாகாக்களையே பெற முடியும். இதனால், எங்கள் கட்சியில் உள் பிரச்சினைகளை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே மாநில சட்டமன்றத்தின் சபாநாயகர் பதவியை பாஜகவுக்கு ஒதுக்கியதிலேய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர்களிடையே அதிருப்தி நிலவி வரும் சூழலில், முக்கிய இலாகாக்களையும் பாஜகவுக்கு ஒதுக்கினால், கட்சியில் சிக்கல்கள் அதிகரிக்கும் என கூறி, பாஜகவின் கோரிக்கையை முதல்வர் திட்டவட்டமாக நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறத.
அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்குவது தொடர்பாக, மாநில பாஜகவின் கோரிக்கையை ஏற்கக்கூடாது என்றும், முதல்வர் ரங்கசாமி பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருடன் நேரடியாக தொடர்பு கொண்டு பேச வேண்டும் என்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.
அதே வேளையில், மாநிலத்தில் கூட்டணி அமைச்சரவையை அமைப்பதிலும், இலாக்காக்களை ஒதுக்கீடு செய்வதிலும், முதல்வர் ரங்கசாமி மீது, தங்களது மத்திய தலைமையே அதிருப்தி அடைந்துள்ளதாக பாஜக நிர்வாகிகள் கூறி வருகின்றனர். மேலும் முதல்வராக பதவி ஏற்ற ரங்கசாமி, இதுவரை பிரதமரை சந்திக்க வில்லை என்றும், கடந்த வாரம் புதுச்சேரி மாநில பாஜக அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பிரதமரை சந்தித்தபோது, முதல்வர் ரங்கசாமியும் எங்களுக்கு தலைமையேற்று டெல்லி வந்திருக்கலாம், எதிர்க்கட்சியாக இருந்தாலும் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சம்பிரதாய நடவடிக்கையைக பிரதமர் மோடி சந்தித்து வந்தாரே என்றும் சுட்டிக்காட்டி உள்ளனர்.
இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள அதிகார மோதல் மேலும் வலுத்து வருவதால், கூட்டணிக்குள் பிளவு உருவாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கூட்டணி ஆட்சி விரைவில் கவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து, என்.ஆர்.காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.
மொத்தத்தில் புதுச்சேரி மாநில அரசு முடங்கி உள்ளது. இது மக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இரு கட்சிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான நாராயணசாமி, பொதுவாக புதிய அரசாங்கங்களுக்கு தேனிலவு காலம் இருக்கும், ஆனால் புதுச்சேரியின் தற்போதைய என்.டி.ஏ அரசாங்கத்திற்கு அதுவும் இல்லை என்று கூறியதுடன், என்.ஆர்.சி மற்றும் பாஜக குறித்து மக்களிடையே அவநவம்பிக்கை எழுந்துள்ளது.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. ஆனால் முறையான அரசு இல்லை. இரு கட்சிகளும் வாக்காளர்களுக்கு அநீதி இழைக்கின்றன. அரசாங்கத்தின் பிம்பம் கடுமையாக தாக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் அதன் தற்போதைய வடிவத்தில் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதைப் பார்ப்போம், என்று கடுமையாக விமர்சித்து உள்ளார்.