டெல்லி:  வாட்ஸ்அப் நிறுவனம் தனது புதிய தனியுரிமை கொள்கையை அறிவித்தது. அதை அங்கீகரிக்காத பயனர்களின் சேவை நிறுத்தப்படும் என மிரட்டல் விடுத்திருந்தது. இது பயனர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், வழக்குகளும் தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது, தங்களது தனியுரிமை கொள்கைகளை நிறுத்தி வைப்பதாக நீதிமன்றத்தில் தகவல் கூறியுள்ளது.

சமூக வலைதளமான வாட்ஸ்அப் நிறுவனம்,  தனது தனியுரிமை கொள்கை மற்றும் பயனாளர் விதிமுறைகளில் மாற்றத்தை  ஜனவரி மாதம் அறிவித்திருந்தது. அதன்படி, நாம் கொடுக்கும் விவரங்களான நம் மொபைல் எண், புரொபைல் பெயர், படங்கள் சேகரிக்கப்படும். டெலிவரி ஆகாத செய்திகள் 30 நாட்கள் வரை என்கிரிப்ட் செய்யப்பட்ட நிலையிலேயே வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் சர்வரில் வைத்திருக்கப்படும், அதன் பின் டெலிட் செய்யப்படும் என  கூறியிருந்தது. மேலும்,  நாம் கொடுக்கும் தொடர்புகள், பணப்பரிமாற்றத் தரவுகள், பேமெண்ட் விவரங்கள், பேமெண்ட் முறை, ஷிப்பிங் விவரங்கள் போன்றவைகளும் சேகரிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இதை ஏற்காதவர்களின் சேவைகள் தடை செய்யப்படும் என்றுb மிரட்டல் விடுத்ததுடன், பிரைவசி கொள்கை அப்டேட்டை  மே 15-ம் தேதிக்குள் சம்மதித்து அப்டேட் செய்ய வேண்டும். அப்படி இல்லையெனில் வாட்ஸ் ஆப் கணக்கின் பல சேவைகளை வழக்கம் போலப் பயன்படுத்த முடியாது என எச்சரித்திருந்தது.

இதை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டிஎன் படேல், ஜோதி சிங் ஆகியோர் கொண்ட அமர்வு, வாட்ஸ்அப் நிறுவனம்தாக்கல் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்து கொண்டு விசாரணை நடத்தி வருகிறது.

இன்றைய விசாரணையின்போது, வாட்ஸ்அப் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, மத்திய அரசு தனிநபர் தரவுகள் பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்கும் வரை தனது தனிநபர் கொள்கைகளை  நிறுத்தி வைப்பதாக தெரிவித்து உள்ளது.