டோக்கியோ: ஜப்பானில் மீண்டும் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், அந்நாட்டு அரசு அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது. மேலும் போட்டியை நேரடியாக காண ரசிகர்களுக்கு தடை விதித்துள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை ஒலிம்பிக் போட்டி நடைபெறுகிறது. இதற்கிடையே டோக்கியோவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் (நேற்று புதிதாக 896 பேருக்கு தொற்று) வருகிற 12-ந் தேதி முதல் பிரதமர் யோஷிஹிடே சுகா நெருக்கடி நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

கொரோனா தொற்று உருமாறிய நிலையில் மீண்டும் பரவி வருகிறது. தற்போது டெல்டா, டெல்டா பிளஸ் என உருமாறி பரவி வருகிறது. இந்த வைரஸ் தாக்கம் ஜப்பானில் அதிகரித்து வருகிறது. நேற்று (ஜூலை 8) மட்டும் அங்கு 896 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வரும் மாதங்களில் மேலும் தீவிரமடையும் என அஞ்சப்படுகிறது. இதையடுத்து, தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ஜப்பான் அரசு தலைநகர் டோக்யோவில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி தொடங்க இன்னும்  2 வாரமே உள்ள நிலையில் திடீரென ஜப்பான் அரசு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டிருப்பது  உலக நாடுகளியே  அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து ஜப்பான் ஒலிம்பிக் மந்திரி தமயோ மருகவா கூறியதாவது, கொரோனா பரவலை தடுக்கும் வகையில்  அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதால், அதன்  கட்டுப்பாடுகளுக்குட்பட்டே ஒலிம்பிக் போட்டி நடைபெறும். ரசிகர்களுக்கு போட்டியை நேரடியாக காண தடை விதிக்கப்படுவதாகவும், இந்த ஒலிம்பிக் திருவிழா ரசிகர்கள் இன்றி வித்தியாசமான முறையில் நடக்கும் எறு தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஒலிம்பிக் போட்டியை நேரடியாக வெளிநாட்டு ரசிகர்களுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டது. உள்நாட்டு ரசிகர்கள் 10 ஆயிரம் பேர் வரை கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தப்போது கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், ரசிகர்களுக்கு முற்றிலுமாக அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஒலிம்பிக் போட்டியை காண குவியும் ரசிகர்களால், ஒலிம்பிக் கமிட்டிக்கு  ரூ.6 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ரசிகர்களுக்கு தடை போடப்பட்டு உள்ளதால், பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என  ஒலிம்பிக் கமிட்டி அதிர்ச்சி தெரிவித்துள்ளது.