சென்னை: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியம் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக போட்டா ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசு உடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் இதை தெரிவித்தனர்.

பழைய ஓய்வூதியம் திட்டம் தொடர்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வரும் 6ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், அவர்களிடம் அமைச்சர்கள், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அவர்களின் பழைய ஓய்வூதியம் உள்பட கோரிக்கைகள் குறித்து நாளை முதலமைச்சர் முக்கிய அறிவிப்பு வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், ஜாக்டோ ஜியோவின் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக உறுதி அளித்தபடி, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த நான்கரை ஆண்டு காலமாக போராடி வருகின்றனர். இதையடுத்து, முதல்வர் ஸ்டாலின், பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், ஒருங்கிணைந்த திட்டம் ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காக ஊரக வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தனது முழு அறிக்கையை தமிழக அரசுக்கு கடந்த வாரம் சமர்ப்பித்தது. ஆனால், இந்த மூன்று ஓய்வூதிய திட்டங்களில் எந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற குழுவின் பரிந்துரையை தமிழக அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
இதற்கிடையே, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, போட்டோ ஜியோ ஆகியவை வரும் 6ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் இறங்கப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. இந்த கூட்டமைப்புக்களின் நிர்வாகிகள் கடந்த டிசம்பர் 2 2ஆம் தேதி அமைச்சர்கள் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், இன்று காலை தலைமை செயலகத்தில் ஜாக்டோ ஜியோ மற்றும் போட்டோ ஜியோ குழுவினருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் ஓய்வூதிய விவகாரத்தில் அரசு ஊழியர்கள் சங்கங்களிடம் அமைச்சர்கள் குழுவினர் அரசின் நிலைபாடு தொடர்பாக எடுத்துரைத்தாக கூறப்படுகிறது. அமைச்சர்கள் முன் வைத்த நிலைபாட்டை, அரசு ஊழியர்கள் சங்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.
இதுதொடர்பாக தலைமை செயலகத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த போட்டோ ஜியோ நிர்வாகிகள், “அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார் என அமைச்சர்கள் எங்களிடம் தெரிவித்தனர். எங்களின் 23 ஆண்டு கால கோரிக்கைக்கு நாளை வெளியாக போகும் அறிவிப்பு தீர்வாக இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என தெரிவித்தனர்.
அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு மீண்டும் கொண்டு வர அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் நிலையில், அவ்வாறு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்பட்டால் அதற்காக பெருமளவு நிதி தேவைப்படும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
[youtube-feed feed=1]