பிரியங்கா காந்தி மோடிக்கு எதிராக வாரணாசி தொகுதியில் களம் இறங்குவாரா?

Must read

வாரணாசி

வாரணாசி தொகுதியில் மெகா கூட்டணி சார்பில் ஒருங்கிணந்த எதிர்க்கட்சி வேட்பாளராக பிரியங்கா காந்தியை மோடிக்கு எதிராக போட்டியிட ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உத்திரப் பிரதேச கிழக்கு பகுதியின் பொறுப்பையும் கவனித்துக் கொள்கிறார். காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளான மகாகட்பந்தன் என்னும் மெகா கூட்டணிக் கட்சிகளுக்காகவும் அவர் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அனைத்துக் கூட்டணிக் கட்சிகளையும் அவர் தனது சொந்தக் கட்சிகளைப் போல் நடத்துவதாக தகவல்கள் கூறுகின்றன.

பிரியங்கா தேர்தலில் போட்டியிடுவது குறித்து எதுவும் முடிவு தெரிவிக்காமல் உள்ளார். ஆயினும் அவர் இந்த தேர்தலில் களம் இறங்குவார் என அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. அவரும் கட்சி விரும்பினால் மட்டுமே தாம் போட்டியிட உள்ளதாக தொடர்ந்து கூறி வருகிறார்.  மெகா கூட்டணிக்கு வாரணாசி மற்றும் லக்னோ தொகுதிகளின் வெற்றி மானப் பிரச்சினை என அரசியல் ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் மோடி, 5,81,122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.  அப்போது அவர் சுமார் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். இந்த தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இணைந்து ஒரு பொதுவான வேட்பாளரை நிறுத்தினால் மோடிக்கு வெற்றி வாய்ப்பு மிகவும் குறையும் என மெகா கூட்டணி நம்புகிறது.

ஆகவே மெகா கூட்டணி சார்பில் பிரியங்கா காந்தியை பொதுவான வேட்பாளராக வாரணாசி தொகுதியில் நிறுத்தலாம் என ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

More articles

Latest article