காந்தி நகர், குஜராத்

பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் சொத்துக்கள் 7 வருடங்களில் மும்மடங்கு அதிகரித்து ரூ.38.81 கோடி ஆகி உள்ளது.

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா காந்திநகர் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த பாஜக மூத்த தலைவர் அத்வானியை ஓரம் கட்டி விட்டு அமித்ஷாவுக்கு இந்த தொகுதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று அமித்ஷா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில் அவருடைய சொத்துக்கள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அந்த சொத்துக் கணக்கின் படி தற்போது அவருடைய மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.38.81 கோடி ஆகும். அமித்ஷா மற்றும் அவர் மனைவிக்கு ரூ.27.80 லட்சம் சேமிப்பு உள்ளது. அதை தவிர வைப்புத் தொகை ரூ.9.80 லட்சம் உள்ளது.

அமித்ஷாவுக்கும் அவர் மனைவிக்கும் வருடம் தோறும் ரூ.2.84 கோடி வருமானம் கிடைத்து வருகிறது. இந்த வருமானம் ஊதியம், வாடகை மற்றும் விவசாய வருமானம் ஆகியவைகளை உள்ளடக்கியது ஆகும்.

அமித்ஷாவிடம் ரொக்கமாக ரூ. 20,633 உள்ளது. அவர் மனைவியிடம் ரூ.72,878 ரொக்கமாக உள்ளது.

கடந்த 2012 ஆம் வருடம் அமித்ஷா குஜராத் சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட போது அவருடைய மொத்த சொத்துக்கள் ரூ. 11.79 கோடியாக இருந்தது. அப்போது அவர் மகன் ஜெய் ஷா இவருடன் சேர்ந்து இருந்ததால் அவருடைய சொத்தும் இதில் சேர்க்கப்பட்டிருந்தது. அமித்ஷாவின் சொத்துக்கள் 7 வருடங்களில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.