மும்பை: ஐபிஎல் தொடர்களில் ‘பவர் பிளேயர்’ என்ற ஒரு புதிய நடைமுறையை அறிமுகம் செய்வது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் புதிய முறை குறித்து கூறப்படுவதாவது; போட்டிக்கு முன்னதாக 11 பேர் கொண்ட இறுதிப் பட்டியலை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. ஒட்டுமொத்தமாக 15 பேர் கொண்ட அணி மட்டுமே இருக்கும். அதன்படி, போட்டியின் சூழலுக்கு ஏற்ப கடைசி நேரத்தில் வீரர்களை மாற்றிக் கொள்ளலாம்.
பேட்டிங் செய்யும் அணி மற்றும் பந்துவீசும் அணி ஆகிய இரண்டு அணிகளுக்குமே இது பொருந்தும். அதன்படி, கடைசி ஓவரில், வெற்றிக்காக, அதிக ரன்கள் அடிக்க வேண்டுமென்ற நிலை ஏற்பட்டால், போட்டியிலேயே பங்கேற்காத வெளியே அமர்ந்திருக்கும் வீரரை அழைத்து அந்த ஓவரை ஆட வைக்கலாம்.
அதேசமயம், கடைசி ஓவரில் பேட்டிங் முரணானது என்று கூறப்படும் இத்தகைய நடைமுறையை, ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
விரைவில் துவங்கவுள்ள சையது முஷ்டாக் அலி டிராபி டி-20 தொடரிலேயே இதை அறிமுகம் செய்ய வேண்டுமென்ற குரல்கள் எழுந்துள்ளன. எனவே, இதுகுறித்த முடிவை விரைவில் அறிவிக்கவுள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.