புதுடெல்லி: வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக, இவிஎம் இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன், விவிபிஏடி சீட்டுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமென வலியுறுத்தி, பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் கமிஷனை இன்று சந்திக்க உள்ளார்கள் என்ற தகவல்கள் வெளிவருகின்றன.

இதுதொடர்பான உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டலை அவர்கள் தேர்தல் கமிஷனிடம் எடுத்துக்காட்ட உள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்தமாக ஒரு சட்டசபை தொகுதியில் பதிவான இவிஎம் வாக்குகளின் எண்ணிக்கையோடு, விவிபிஏடி சீட்டுகளையும், எண்ணிக்கை முரண்பாடு ஏற்படும்போது ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமென்பதுதான் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை.

ஒரு சட்டமன்ற தொகுதியின் 5 வாக்குச் சாவடிகளின் இவிஎம் எண்ணிக்கையை, விவிபிஏடி சீட்டுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்படி, தேர்தல் கமிஷனை, முன்னதாக உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இடதுசாரிகள், தெலுங்குதேசம், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்கள் இன்று தேர்தல் கமிஷனை சந்திக்கவுள்ளார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன.