மாலே: இந்திய – மாலத்தீவு உறவில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, கடந்த 2017ம் ஆண்டு சீனாவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது.

பிரதமர் மோடி இரண்டாம் முறையாக பதவியேற்ற பின்னர், மாலத்தீவு பயணம் மேற்கொண்டு, இருதரப்பு உறவுகளைப் புதுப்பித்து, பல ஒப்பந்தங்களை அந்நாட்டுடன் கையெழுத்திட்டார். இதனையடுத்து, இந்திய – மாலத்தீவு உறவில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.

இதன்விளைவாக, அந்நாடு கடந்த 2017ம் ஆண்டு சீனாவுடன் மேற்கொண்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஒப்பந்தத்தின்படி, மாலத்தீவில் சீன அரசு ஒரு வானியல் ஆய்வு மையத்தை நிறுவும்.

ஆனால், தற்போதைய புதிய சூழலின்படி, அந்த ஒப்பந்தத்தை மாலத்தீவின் புதிய அரசாங்கம் ரத்துசெய்யும் என்று தெரிகிறது. அப்படி நடக்கும் பட்சத்தில், அது இந்தியாவிற்கான ஒரு பெரிய ராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்படும்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், மாலத்தீவு என்பது ஒரு மிக முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு என்பது குறிப்பிடத்தக்கது.