தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வெல்லப்பட்டி என்ற கிராமத்து மீனவர்களின் வலையில் ஒவ்வொரு நாளும் அதிகளவிலான நண்டுகள் சிக்கினாலும், அவற்றை நேரடியாக விற்பனை செய்யும் வசதி இல்லாததால், முறையான வருமானம் இன்றி வாடுகிறார்கள்.
நாள் ஒன்றுக்கு 500 கிலோ கடல் நண்டுகள் வரை இவர்களின் வலையில் சிக்குகின்றன. ஆனால், இவர்களிடம் வந்து நேரடியாக நண்டுகளை வாங்குவோர் யாரென்றோல் இடைத்தரகர்கள். அவர்கள், சில ஆயிரங்களை மீனவர்களுக்கு கடன் கொடுத்துவிட்டு, அதற்கு பதிலாக நண்டுகளை குறைந்த விலைக்கு தருமாறு நெருக்கடி கொடுத்து வாங்கிக் கொள்கின்றனர். ஒரு கடன் தீர்வதற்குள், மீனவர்களுக்கு அடுத்த கடன் வந்துவிடுகிறது. பின்னர், அந்த நண்டுகளை பெரிய நிறுவனங்களுக்கு அதிக லாபத்திற்கு விற்று விடுகின்றனர்.
வலையில் சிக்கும் பெரிய நண்டுகளை மட்டுமே இடைத்தரகர்கள் வாங்கிக் கொள்வதால், சிறிய நண்டுகள் உள்ளூர் சந்தைக்கு குறைந்த விலைக்கே செல்கிறது.
இடைத்தரகர்கள் உள்ளூரிலேயே மொத்தம் 4 கொதிநிலை யூனிட்டுகளை திறந்து, அவற்றின் மூலம் தாங்கள் குறைந்த விலைக்கு மீனவர்களிடமிருந்து ஏமாற்றி வாங்கும் நண்டுகளை பதப்படுத்திக் கொள்கிறார்கள். பின்னர், அவற்றை தூத்துக்குடி நகருக்கு கொண்டுசென்று நல்ல விலைக்கு விற்று விடுகிறார்கள்.
எனவே, மீனவர்களின் இந்த அவல நிலையைப் போக்க வேண்டுமெனில், அரசு தேவையான உதவிகளை செய்து, நேரடியாக சந்தைப்படுத்தும் வசதியை மீனவர்களுக்கு செய்துதர வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.