மதுரை: கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் பட்டாசு தயாரிப்புக்கு தடை விதிப்பது தொடர்பாக பரிசீலிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

விருதுநகரில்  நடைபெற்ற பட்டாசு விபத்தில் 25 பேர் உடல் சிதறி உயிரிழந்த நிலையில்,  பட்டாசு விபத்து தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, வெயில் காலமான ஏப்ரல், மே, ஜூன்  ஆகிய 3 மாதங்களில் பட்டாசு தயாரிப்புக்கு தடை விதிக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்க அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த கணவரின் மரணத்திற்கு இழப்பீடு கோரி சிவகாசியை சேர்ந்த சமுத்திரவள்ளி உள்பட சிலர்  உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப் பணி, கைம்பெண் ஓய்வூதியம், வீடு உள்ளிட்ட மறுவாழ்வு பணிகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை வழங்கியிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அரசுத் தரப்பில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக ஏப்ரல் 21ந்தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது  சிவகாசி, விருதுநகர் பகுதிகளில்,  “தொடர்ச்சியாக பட்டாசு  விபத்துகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? என்று கேள்வி எழுப்பியவர், இந்த விஷயத்தில் அரசின் நடவடிக்கை வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும்” என  வலியுறுத்தினார்.

இதையடுத்து,  அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “விருதுநகர் வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்குக்காக ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், “தொழிலாளர்களுக்கு 25 முதல் 30 லட்சம் ரூபாய் காப்பீடு செய்த பின்னரே அவர்கள் அப்பணியில் ஈடுபடுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். விபத்துக்கள் நிகழ்வது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், பெண்களே பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்” என்றனர்.

மேலும், “கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களில் பட்டாசு தயாரிப்பை நிறுத்தி வைப்பது தொடர்பாக அரசு முடிவெடுக்க வேண்டும்” என குறிப்பிட்டு, வழக்கறிஞர்கள் தரப்பில் பட்டாசு ஆலை விபத்துகளை தடுப்பது தொடர்பான பரிந்துரைகளை வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

மேலும், இந்த வழக்கு விசாரணையை வரும் ஜூன் 8 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

[youtube-feed feed=1]