2021 சட்டமன்ற தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையில், சட்டமன்ற மேலவை கொண்டுவரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பல்லாண்டுகளாகவே, தமிழ்நாட்டில் மேலவை குறித்த பேச்சு ஓடிக்கொண்டுள்ளது. கடந்த 1986ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன், தனக்குப் பிடித்த ஒரு நடிகையை, மேலவை உறுப்பினர் ஆக்கமுடியவில்லை என்ற விரக்தியாலும், மேலவை தலைவராக கலைஞர் கருணாநிதி வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தாலும், மேலவையை கலைத்தார் என்று கூறப்படுவதுண்டு.
அதிலிருந்து அதிமுக என்ற கட்சிக்கு, மேலவை என்றால் ஆகாது. ஆனால், அந்த மேலவையின் மீது திமுகவுக்கு ஒரு கண் உண்டு என்ற நிலை.
மேலவை கலைக்கப்பட்ட பிறகு, கடந்த 1989ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக, பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், 2 ஆண்டுகளிலேயே கலைக்கப்பட்டது. எனவே, அந்தக் கதையை விட்டுவிடுவோம்.
ஆனால், திமுகவின் கடந்த 2 ஆண்டுகால ஆட்சி காலங்களை கவனித்தோமென்றால், கலைஞர் கருணாநிதி, மேலவை முயற்சிகளை கடைசி காலத்தில் மேற்கொள்வதையே வழக்கமாக கொண்டிருந்தார்.
கடந்த 1996-2001 காலத்தில் முதல்வராக பெரிய பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த திமுகவுக்கு, இடையில் 13 மாதங்கள் தவிர, மத்திய அரசின் செல்வாக்கு இருந்தது. அப்போது நினைத்திருந்தால் மேலவையை எளிதாக கொண்டு வந்திருக்கலாம். ஆனால், கடைசி காலங்களில் அந்த முயற்சியை கலைஞர் கருணாநிதி மேற்கொண்ட நிலையில், அந்த முயற்சி நிறைவடைவதற்குள் அவர் தேர்தலில் தோற்றுப்போனார்.
அதன்பிறகு, 2006-2011 காலங்களில் ஆட்சியை இருந்தவருக்கும், அன்றைய மத்திய அரசின் ஆதரவு இருந்தது. ஆனால், அப்போதும் மேலவைக்கான முயற்சியை கடைசி காலத்திலேயே மேற்கொண்டார். பிறகு, 2011 தேர்தலில் தோற்றவுடன் எல்லாம் முடிந்துபோனது.
அதிமுக ஒவ்வொருமுறை பதவியேற்கும்போதும், மேலவை கிடையாது என்ற முடிவையே மேற்கொள்ளும்.
எனவே, திமுக இந்தமுறை வெற்றிபெற்று ஆட்சிக்கு வரும்பட்சத்தில், அந்தக் கட்சிக்கு உண்மையிலேயே மேலவையைக் கொண்டுவரும் எண்ணம் இருந்தால், அதற்கான முயற்சிகளை, இந்தமுறையாவது தொடக்க காலத்திலேயே மேற்கொள்ளட்டும்!