ராஞ்சி: இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியைக் காண்பதற்கு ஜார்க்கண்ட் மண்ணின் மைந்தன் மகேந்திர சிங் தோனி வருவார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அனைத்துவகை கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஒருகாலத்தில் கேப்டனாக இருந்தவர் தோனி. பின்னர், கடந்த 2014ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். 2019 உலகக்கோப்பை தொடருக்குப் பின்னர், அவர் இந்திய அணி சார்பாக எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. அவர் எப்போது முழு ஓய்வை அறிவிப்பார் என்பது குறித்தும் தெரியவில்லை.

இந்நிலையில், ‍இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியைக் காண வருமாறு ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் சார்பில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அந்த அழைப்பை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனவே, 5 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் அவர் மைதானத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தமுறை ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியின்போது கடைசி நாள் ஆட்டத்தைக் காண வந்திருந்தார் தோனி.

இப்போட்டிக்காக, இந்திய ராணுவம், துணை ராணுவம் மற்றும் ஜார்க்கண்ட் போலீஸ் ஆகியோரை கவுரவிக்கும் வகையில் 5000 இலவச டிக்கெட்டுகளை ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்கம் வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.