தருமபுரி: அரசு பள்ளியில் மேசையை உடைத்த 5 மாணவ மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இந்த ஆண்டு இறுதி தேர்வு எழுத தடை விதிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் பெற்றோர்களும் கல்வித்துறை நிபுணர்களும் அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே அ.மல்லாபுரம்  அரசு பள்ளியில், பிளஸ்2 மாணாக்கர்களுக்கான செய்முறை தேர்வு (பிராக்டிக்கல் தேர்வு) முடிவடைந்த தும், அந்த பள்ளியில் படித்து வந்த மாணவ மாணவிகள்சேர்ந்து, தங்களது வகுப்பில் கிடந்த மேசை நாற்காலி, டெஸ்க், ஸ்விட்ச், மின்விசிறி, டியூப் லைட் உள்பட அனைத்து பொருட்களையும் அடித்து  உடைத்து சேதப்படுத்தினர். ஆண் மாணவர்கள் மட்டுமின்றி பெண் மாணவிகளும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர்.

இந்த  சத்தம் கேட்டு வகுப்பறைக்கு தலைமை ஆசிரியர் முத்துசாமி அதிர்ச்சி அடைந்தார். அவர் கண்டித்தும், அதை கேட்காத மாணவர்கள், தொடர்ந்து பெஞ்சு களை உடைத்துள்ளனர். இதுகுறித்து, அவர் உடனே மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து உடனே பள்ளிக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். இதையடுத்து பள்ளிக்கு வந்த பெற்றோர்களுக்கு பள்ளியில் நடந்த சம்பவத்தை கூறி வகுப்பறையையும் தலைமை ஆசிரியர் காட்டினார்.

இதனை பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தங்களது பிள்ளைகளை கண்டித்தனர். சிலர் தங்களது பிள்ளைகளை அடிக்க பாய்ந்தனர். இதையடுத்து, இதுதொடர்பாக பெற்றோர்களிடமும், மாணாக்கர்களிடமும் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், மாணாக்கர்களின் அடாவடி தொடர்பான வீடியோ  சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதை கண்ட கல்வியாளர்களும், பெற்றோர்களும்  பள்ளி மாணாக்கர்களின் நடவடிக்கையை கடுமையாக விமர்சித்தனர்.

இதைத்தொடர்ந்து,  தருமபுரி மாவட்  முதன்மை கல்வி அதிகாரி  இந்த சம்பவத்தை விசாரித்து சென்றார். இதைத்தொடர்ந்து வீடியோவில் தெரிந்த சில மாணவர்கள் மாணவி என மொத்தம் 5 பேரை 5 நாட்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டு உள்ளது.

ஆனால், சமூக வலைதளங்களில், இதுபோன்ற முறையற்ற செயல்களில் ஈடுபட்ட மாணவ மாணவிகளுக்கு இந்த ஆண்டு பொதுத்தேர்வு எழுத தடை விதிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு கொடுக்கப்படும் கடுமையான தண்டனைதான், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க ரணமாக அமையும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

சஸ்பெண்டு என்று கூறி கண்துடைப்பு நாடகம் நடத்தாமல், எதிர்காலத்தில் அந்த மாணவர்கள் திருந்தி வாழ, இப்போதே கடும் தண்டனை வழங்க வேண்டும் என்றும் நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்,  அப்போது தேர்வு முடிந்ததும் இங்க் அடித்து விளையாடுவோம், இப்போது மாணவர்கள் மேசை உடைத்து விளையாடுகிறார்கள், மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 8ம் வகுப்பு வரையில் மாணவர்களின் கல்வி நிலை குறித்து சர்வே எடுக்க சொல்லியிருப்பதாகவும்  அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.