சென்னை: ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து தமிழக அரசு நாளை ஒரு அறிவிப்பை வெளியிடும் என்று சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறி இருக்கிறார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக தற்போது பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ளன. அலுவலகங்கள், வணிக வளாகங்கள், திரையங்குகள், சந்தைகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ், தமிழகத்தில் இதுவரை வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 60,739 ஆகும்.
230 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளனர். இதில் 28 நாள்கள் கண்காணிப்பு முடித்தவர்கள் 32,075. இதுவரை 6,095 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 690 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், இன்றைக்கு புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது பேசிய பீலா ராஜேஷ், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து மாநில அரசு நாளை ஒரு அறிவிப்பை வெளியிடும் என்று தெரிவித்தார்.