சென்னை மாநகராட்சி கொரோனா செயலியை பதிவிறக்கம் செய்த 1 லட்சம் மக்கள்

Must read

சென்னை

சென்னை மாநகராட்சியின் கொரோனா செயலியை இதுவரை 1 லட்சம் பேர் பதிவிறக்கம்  செய்துள்ளனர்.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.   அவ்வகையில் சென்னை திருவொற்றியூர் பகுதியில் நடந்த கணக்கெடுப்பு பணியை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் சென்று பார்வையிட்டார். அந்த பகுதியில் வட மாநிலத்தவர் தங்க வைக்கப்பட்டுள்ள திருமண மண்டபத்திலும் அவர் ஆய்வு செய்தார்.

அதன் பிறகு ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம், “சென்னை மாநகர் 15000 பகுதிகளாக பிரிக்கப்பட்டு கொரோனா தொற்று குறித்து வீடு வீடாகக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.  நகரில் உள்ள 18 லட்சம் குடும்பங்களில் அலுவலர்கள் தினமும் ஆய்வு செய்து வருகின்றனர்.  அறிகுறிகள் இருப்போருக்குக் கண்காணிப்பு அளிக்கப்படும்.

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பகுதியில் பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்படும்.   இதுவரை சென்னையில் 40 பாதுகாப்பு வளையங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளது.   இந்த வளையங்களுக்குள் உள்ள மக்கள் அந்த பகுதி எல்லை வரை மட்டுமே வர முடியும்.  மக்கள் சமுதாய இடைவெளியைப் பின்பற்றுவதால் தொற்றை வெகுவாக குறைக்க முடியும்.

சென்னை கோடம்பாக்கம் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதில் அடிப்படையில் அது குறித்த தகவல்கள் திரட்டப்படுகின்றன.  இதைப் போல் டில்லிக்கு சென்று வந்தவர்கள் குறித்த விவரங்களும் பெறப்படுகின்றன..    சென்னை பீனிக்ஸ் மாலில் யாருக்கும் கொரோனா அறிகுறிகள் தென்படவில்லை.

சென்னை மாநகராட்சி சென்ற அறிமுகம் செய்துள்ள கொரோனா செயலியை 10 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்வார்கள் என எதிர்பார்த்த நிலையில் 1 லட்சம் பேர் மட்டுமே பதிவிறக்கம் செய்துள்ளனர்.  மக்கள் இதைப் பதிவிறக்கம் செய்ய முன்வர வேண்டும்.

இந்த செயலி மூலம் 623 பேருக்கு அறிகுறிகள் இருந்தது கண்டறியப்பட்டு மருத்துவர்கள் அவர்கள் வீட்டுக்குச் சென்று சோதனை செய்தனர்.  சோதனையில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த நடவடிக்கைகள் மக்கள் நலனுக்காகச் செய்யப்படுகின்றன.  எனவே யாரும் பீதி அடைய வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளார்,

More articles

Latest article