சென்னை: சசிகலாவை வரவேற்ற கட்சி நிர்வாகிகளை நீக்கி வரும் அதிமுக தலைமை, ஓபிஎஸ் மகனையும் நீக்குமா என்ற கேள்வி கட்சியினரிடையே எழுந்துள்ளது.

கடந்த 27ம் தேதி சசிகலா விடுதலையான நிலையில் தற்போது கொரோனா தொற்று காரணமாக பெங்களூருவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது விடுதலை அதிமுகவில் நிச்சயம் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதற்கான அனைத்து சாத்தியங்களுமே இப்போது தெரிய தொடங்கி உள்ளன.

சசிகலாவை வரவேற்று நெல்லை, தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் ஆதரவு போஸ்டர்கள் பளிச்சிட, அவர்கள் அதிரடியாக கட்சியில் இருந்து அதிமுக நீக்கியது. இந் நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓபிஎஸ் மகன் ஜெய பிரதீப் சசிகலாவின் விடுதலையை வரவேற்றுள்ளார். நேற்று டுவிட்டரில் அவர் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அம்மாவின் உண்மை தொண்டனின் பதிவு என்று குறிப்பிட்டு வாழ்த்தி வரவேற்று இருந்தாலும் இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல என்று குறிப்பிட்டு உள்ளார். போஸ்டர் ஒட்டும் நிர்வாகிகளை அதிரடியாக நீக்கும் கட்சி தலைமை இப்போது ஓபிஎஸ் மகன் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

சில வாரங்களுக்கு முன்பு ராஜேந்திர பாலாஜியும், கோகுல இந்திராவும் சசிகலாவை ஆதரித்து பேசி பின்னர் கட்சி தலைமையிடம் குட்டு வாங்கினர். தற்போது ஜெயபிரதீப் நடவடிக்கைக்கு ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் என்ன செய்ய போகின்றனர் என்று அதிமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவரையும் கட்சியில் இருந்து தலைமை நீக்குமா என்றும் தொண்டர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.