நடைமுறை எதார்த்தத்த‍ை தனது சில பரிசோதனைகளின் மூலம் புரிந்துகொண்டு, எப்படி எப்படியோ தனக்குப் போடப்பட்ட கொக்கிகளில் இருந்து, தனது உடல்நிலையை காரணம் காட்டி, அரசியல் கட்சி தொடங்கும் நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொண்டார் ரஜினிகாந்த்.

அதேசமயம், விலகலுக்கு முன்னதாக, தனது கட்சி அறிவிப்பு தொடர்பாக அறிவிப்பதற்காக நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின்போது, தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக ஆர்எஸ்எஸ் முகாமைச் சேர்ந்த அர்ஜுன மூர்த்தி என்பவரை அறிவித்தார் ரஜினி காந்த். அதற்கு முன்னர், பொதுவெளியில் அறியப்படாதவராக இருந்தவர் அந்த அர்ஜுன மூர்த்தி.

தற்போது, ரஜினி ரசிகர்களுக்காக, தமிழக அரசியலில், மாற்றத்திற்கான ஒரு புதிய கட்சியை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார், சாரி, அறிவிக்க வைக்கப்பட்டுள்ளார் அர்ஜுன மூர்த்தி. இந்த முயற்சி எந்தளவிற்கு செல்கிறது என்பது இருக்கட்டும்.

ஆனால், இந்த அறிவிப்பே ஒரு காமெடியாக பார்க்கப்படுகிறது. இப்படியான ஒரு புத்திசாலித்தனமான(!) ஐடியாவை, நிச்சயமாக, ஆடிட்டர் குருமூர்த்தியை தவிர வேறு யாராலும் வழங்க முடியாது. எனவே, இத்தகைய நகைச்சுவை அறிவிப்பிற்கு பின்னால், ஏற்கனவே பல திட்டங்களை முன்மொழிந்து, அவை அனைத்திலும் பல்பு வாங்கி அசிங்கப்பட்டு, ஆனாலும் கொஞ்சமும் அவை குறித்த உறுத்தல் இல்லாத குருமூர்த்திதான் இருப்பார் என்பதே அரசியல் அரங்கின் மிகப்பெரிய சந்தேகம்!