திமுகவின் பொதுச்செயலராக இருந்த பேராசிரியர் அன்பழகன் மறைந்த நிலையில், அப்பதவிக்கு ஆ.ராசாவை நியமித்தால், திமுகவின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படும் என்ற குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன.

அன்பழகனின் மறைவைத் தொடர்ந்து, அப்பதவிக்கு துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, பொன்முடி மற்றும் அதிமுகவிலிருந்து கட்சிமாறி வந்த எ.வ.வேலு ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.

ஆனால், திமுகவின் தலித் முகமாக மட்டுமின்றி, திஹார் சிறையில் பல மாதங்கள் வாடினாலும், கட்சி மற்றும் தலைமையின் மீதான விசுவாசம் குறையாதவராயும், பெரியாரிய அம்பேத்கரிய சிந்தனை உள்ளவராயும், நல்ல படிப்பாளியாகவும் இருக்கும் ஆ.ராசா அப்பதவிக்கு மிகவும் பொருத்தமானவராக இருப்பார் என்று ஒரு சாரார் குரலெழுப்புகின்றனர்.

தொடக்க காலத்தில், முதலியார் கட்சி என்ற முத்திரை திமுகவின் மேல் வலுவாக விழுந்தது. ஆனால், அக்கட்சிக்கு இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த கலைஞர் கருணாநிதி பின்னாளில் தலைமையேற்றபோதும், முதலியார் கட்சி முத்திரை எளிதாக மாறிவிடவில்லை.

அக்கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில், அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களே கோலோச்சினர். திமுகவின் முக்கிய வாக்குவங்கியாக வன்னியர், முத்தரையர் மற்றும் சில மொழிவழி சிறுபான்மையின சமூகத்தவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.

தலித் வாக்கு வங்கி என்பது திமுகவின் பக்கமாக எப்போதுமே பெரியளவில் ஒன்று திரளாமல் இருந்து வருகிறது என்பதுதான் நடைமுறை உண்மை என்றாலும்கூட, திராவிட சித்தாந்தத்தின் அடிப்படையில், ஆ.ராசா போன்ற ஒருவரை, கட்சியின் உயர்மட்ட அதிகாரம் படைத்த பதவியொன்றில் அமர்த்துவதென்பது அக்கட்சிக்கு சித்தாந்த ரீதியில் வலு சேர்க்கும் என்கின்றனர் அவர்கள்.

திராவிட இயக்கம் தலித்துகளுக்கு உரிய முக்கியத்துவம் தருவதில்லை என்ற பிரச்சாரத்தையும் எளிதாக முறியடிக்கலாம் என்கின்றனர். தேர்தல் அரசியல் மற்றும் சாதிய அடையாளம் என்பதைத் தாண்டி, ஆ.ராசாவின் விசுவாசம் மற்றும் சிந்தனை அறிவு ஆகியவற்றின் அடிப்படையில், இந்தப் பெரிய அங்கீகாரத்தை வழங்கலாம் என்பது அவர்களின் வாதம்.

ஆனால், இந்த விஷயத்தில், கட்சித் தலைமை பல விஷயங்களை யோசித்தே முடிவு செய்யும் என்ற குரல்கள் இன்னொரு தரப்பிலிருந்து எழுகின்றன. பொதுச் செயலாளர் பதவி நியமனத்தில், திமுகவின் கிச்சன் கேபினெட் செல்வாக்கு செலுத்தும் என்பதையும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இன்றையப் போட்டி மிகுந்த மற்றும் கரணம் தப்பினால் மரணம் என்கிற ஒரு தேர்தல் அரசியல் சூழலில், சித்தாந்தத்தை அளவுக்கு மீறி தூக்கிப் பிடிப்பது பயனற்றதே என்பதை திமுக தலைமை நீண்டகால அனுபவத்திலே உணர்ந்துள்ளது.

எனவே, பல விஷயங்களை அலசி ஆராய்ந்து, கிச்சன் கேபினெட் பரிந்துரை மற்றும் நடைமுறை நிர்ப்பந்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே கட்சியின் பொதுச்செயலாளர் நியமனம் நடைபெறும் என்கின்றனர் அவர்கள்.