சென்னை
தி.மு.க. எம்.எல்.ஏக்கள் இருபது பேரின் பதவியை பறிக்க அல்லது உரிமையை முடக்க மாநில அரசு திட்டமிட்டிருப்பதாகவும் அது நடக்குமா என்பது குறித்தும் பரபரப்பாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகின்றன.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் ஆளும் கட்சி, சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சட்டசபையை கூட்டி பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான தி.மு.க.வும் வலியுறுத்துகிறது.
அ.தி.மு.க.வின் பெரும்பான்மை பலம் குறைந்துள்ள நிலையில், தி.மு.க.வுடன் சேர்ந்து டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் அரசுக்கு எதிராக வாக்களிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே சட்டசபையை கூட்டி பலத்தை நிரூபிக்கும் சூழ்நிலை வரும்போது ஆட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்படக்கூடும்.
இந்த சவாலை சந்திக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், மூத்த அமைச்சர்களும் சபாநாயகரை சந்தித்து ஆலோசனை செய்தனர். இதையடுத்து ஆட்சிக்கு எதிராக வரும் சவால்களை சந்திக்க புதிய வியூகம் அமைத்திருக்கிறார்கள்.
இதையடுத்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர், அ.தி.மு.க கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக சபாநாயகரிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கம் கேட்டு சபாநாயகர் கடிதம் அனுப்பி இருக்கிறார். இதற்கு அவர்கள் உரிய விளக்கம் அளிக்க தவறினால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்பு உண்டு என்றும், அப்படி நடந்தால் இவர்கள் அவை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க.. திமுக எம்.எல்.ஏக்களை முடக்கும் திட்டமும் தயாராக இருப்பதாக பேசப்படுகிறது.
கடந்த மாதம் 19-ந்தேதி நடந்த சட்டமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட சிலர் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்கப்படுவதாக கூறி அதை சபைக்கு கொண்டு வந்து காட்டினர். இதையடுத்து தி.மு.க. உறுப்பினர்கள் அனைவரும் சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.
தி.மு.க. எம்.எல்.ஏக்களின் நடவடிக்கை அவை உரிமையை மீறிய செயல். என்றும் குட்கா பாக்கெட்டுகளை கொண்டு வந்து சபையில் காட்டிய தி.மு.க . உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் அவை உரிமை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
குட்கா விவகாரம் தொடர்பாக இதுவரை அவை உரிமை குழு விவாதிக்கவில்லை. ஆனால், தற்போது அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தொடர்ந்து அவை உரிமை குழுவை கூட்டி குட்கா பாக்கெட்டுகளை சபையில் காட்டிய தி.மு.க. உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் வருகிற 28-ந்தேதி அவை உரிமை குழுவின் முதல் கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. . இதில் வீடியோ ஆதாரம் மற்றும் புகைப்படங்களின் ஆதாரத்தின் அடிப்படையில், குட்காவை சபையில் காட்டிய 20 தி.மு.க. உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதை தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்த்தாலும் ஆதாரத்தை அடிப்படையாக கொண்டு 20 தி.மு.க. உறுப்பினர்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்படும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதில் அவை உரிமையை மீறிய தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுப்பது என்று உறுதி செய்யப்பட்டால் 20 தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் சபைக்கு வர முடியாத நிலை ஏற்படும். ஆகவே சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது ஆளும் அரசு தப்பித்துவிடும். ஆளும் தரப்பு இந்தத் திட்டத்துடன்தான் இருக்கிறது என்று அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.
அவை உரிமைக்குழுவில் மொத்தம் 17 பேர் உள்ளனர். பொள்ளாச்சி ஜெயராமனை தலைவராக கொண்ட இந்த குழுவில் முதல்- அமைச்சர் பழனிசாமி, செங்கோட்டையன் உள்பட 10 பேர் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள். 6 பேர் தி.மு.க.வையும், ஒருவர் காங்கிரசையும் சேர்ந்தவர்கள்.
அ.தி.மு.க.வில் உள்ள எம்.எல்.ஏ.க்களில் மூன்று பேர் தினகரன் ஆதரவாளர்கள். இவர்கள் 28-ந்தேதி நடைபெறும் அவை உரிமை குழு கூட்டத்தில் கலந்து கொள்வார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
ஆக, 17 உறுப்பினர்களில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் வராவிட்டால் அல்லது வந்து நடுநிலை வகித்தால் ஆளும் கட்சி தரப்பில் 7 பேரும், எதிர்க்கட்சி தரப்பில் 7 பேரும் இருப்பார்கள். ஆகவே தி.மு.க. உறுப்பினர்கள் மீது அவை மீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.