சென்னை:
ணவன் சொத்தில் மனைவிக்கும் உரிமை உண்டு நீதிபதி ராமசாமி தீர்ப்புக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிவரவேற்பு தெரிவித்துள்ளார்.

கணவன் சம்பாதிக்கிறான் என்றால், 24 மணிநேரம் வீட்டுப் பணிகளை செய்துகொண்டு இருக்கிறாரே மனைவி, அதுவும் சம்பாத்தியம்தானே என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.கிருஷ்ணன் ராமசாமி அவர்கள் வழங்கிய தீர்ப்பினை வரவேற்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில நாள்களுக்குமுன் வந்துள்ள ஒரு வழக்கின் முக்கிய தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வரவேற்றுப் பாராட்டவேண்டிய தீர்ப்பாகும்!

மனுதர்மத்தைப் பின்பற்ற வேண்டுமென சில உயர்நீதிமன்ற நீதிபதிகள் (குஜராத் உயர்நீதிமன்றம்) வெளிப்படையாகவே வர்ணாஸ்ரமத்திற்கு வக்காலத்து வாங்கி பகிரங்கப் பிரகடனம் செய்கிறார்கள்!

அண்மையில், காதலித்த பெண்ணை கைவிட்ட கயவனைப்பற்றி அந்தக் காரிகை போட்ட வழக்கில் ‘அவரைத் திருமணம் செய்துகொண்டால், அவருக்குள்ள ‘செவ்வாய்த் தோஷம்‘ காரணமாக என் குடும்பம் செத்துவிடும்‘’ என்ற ஒரு ‘புருடா -டிபென்ஸ்’ அவிழ்த்துவிட்ட வழக்கில் (அலகாபாத்) அதைக் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர்,

‘‘ஜோதிடர் இது சம்பந்தமாக ஆய்ந்து அவரது முடிவினை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டுமென்று’’ ஓர் ஆணை பிறப்பித்தார். அதை உச்சநீதிமன்றம் தடை (Stay) விதித்து, அறிவியல் மனப்பான்மை பரப்புதல் ஒவ்வொருவரின் கடமையாகும் என்ற 51-ஏ(எச்) பிரிவினை சுட்டிக்காட்டி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மாண்பைக் காப்பாற்றியுள்ளது பாராட்டத்தக்கது!

மக்கள் தொகையில் சரி பகுதியாக உள்ள மானுடத்தின் முக்கிய கூறான மகளிரை அடிமைகள், சம்பளம் கேட்க முடியாத வாழ்நாள் வேலைக்காரர்கள், ‘‘புனிதக் கட்டு- சடங்கு’’ (Sacrament) விவாகத்தில் பிணைக்கப்பட வாழ்நாள் கொத்தடிமைகளாக்கி உள்ளதை எதிர்த்து, தந்தை பெரியார் இந்த மண்ணில் பிரச்சாரம், போராட்டம், தீர்மானங்கள்மூலம் இடையறாது செய்த கிளர்ச்சி இன்று எல்லா மன்றங்களிலும் இந்தக் கருத்தோட்டத்தின் வெற்றி வெளிச்சத் திசையைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டில் வேலை பார்த்து அனுப்பி வைத்த தொகையைப் பயன்படுத்தி வாங்கிய சொத்துகளில் மனைவிக்கு உரிமையில்லை என்று கணவன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. (கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடியில் உள்ள குடும்ப வழக்கு).

இதனை விசாரித்துத் தீர்ப்புக் கூறிய ஜஸ்டீஸ் திரு.கிருஷ்ணன் இராமசாமி அவர்கள்,

‘‘குழந்தைகளை கவனிப்பது, குடும்பத்தை நிர்வகிப்பது என விடுமுறையில்லாமல் இல்லத்தரசிகள் பார்க்கும் வேலை 24 மணிநேர வேலையாகும். அதனை கணவனின் 8 மணிநேர உத்தியோகத்துடன் ஒப்பிட முடியாது;

கணவனும் – மனைவியும் குடும்ப வாகனத்தின் இரட்டைச் சக்கரங்கள்; கணவன் சம்பாத்தியம்மூலம் தன் பங்கை வழங்குகிறார். இல்லத்து நிர்வாகியாக உள்ள மனைவி குடும்பத்தைக் கவனித்துத் தன் பங்கை வழங்குகிறார். எனவே, சம்பாதித்த சொத்தில் மனைவிக்கும் உரிமை உள்ளது. குடும்பத்தைக் கவனிக்கும் இல்லத்தரசிகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அளிக்கும் பங்களிப்பை அங்கீகரித்து எந்தச் சட்டமும் இயற்றப்படவில்லை. ஆனால், அந்தப் பங்களிப்பை நீதிமன்றம் அங்கீகரிப்பதற்கு எந்தச் சட்டமும் தடை விதிக்கவில்லை’’ என்று தமது தீர்ப்பில் மிக அருமையாக எழுதி, ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சி, மகளிர்மீதான ஆண் ஆதிக்கச் சுரண்டலுக்கும், ஆதிக்க எஜமானத்தனத்திற்கும் ஒரு முற்றுப்புள்ளி வைத்துக் காட்டியுள்ளார்!

[youtube-feed feed=1]