போர்ட் ஆஃப் ஸ்பெயின்
மேற்கிந்திய அணி இந்தியாவுக்கு எதிரான 2 ஆம் டெஸ்ட் போட்டியின் 3ஆம் நாள் முடிவில் 5 விக்கட்டுகள் இழந்து 229 ரன்கள் எடுத்துள்ளது.
தற்போது இந்தியா-மேற்கிந்தியஅணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் உள்ள போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 2-வது நாளில் 438 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. 500-வது சர்வதேச போட்டியில் ஆடும் விராட்கோலி (121 ரன்கள்) சதமும், கேப்டன் ரோகித் சர்மா (80 ரன்கள்), ரவீந்திர ஜடேஜா (61 ரன்கள்), யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (57 ரன்கள்), ஆர்.அஸ்வின் (56 ரன்கள்) ஆகியோர் அரைசதமும் அடித்தனர். வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் கெமார் ரோச், ஜோமெல் வாரிகன் தலா 3 விக்கெட்டும், ஜாசன் ஹோல்டர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
மேற்கிந்தியா முதல் இன்னிங்ஸ் 2-வது நாள் முடிவில் 41 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 86 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் தேஜ்நரின் சந்தர்பால் 33 ரன்னில் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் 37 ரன்னுடனும், கிர்க் மெக்கென்சி 14 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
நேற்று 3-வது நாளில் மேற்கிந்தியா வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்து நல்ல தொடக்கம் ஏற்படுத்தினர். ஸ்கோர் 117 ரன்னாக உயர்ந்த போது கிர்க் மெக்கென்சி 32 ரன்னில் (57 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் பந்து வீச்சில், விக்கெட் கீப்பர் இஷான் கிஷனிடம் சிக்கினார். அறிமுக வீரராக களம் கண்டுள்ள முகேஷ் குமார் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் வீழ்த்திய முதல் விக்கெட் இதுவாகும். அப்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சுமார் 30 நிமிடம் பாதிக்கப்பட்டது. இதனால் முன்கூட்டியே மதிய உணவு இடைவேளை எடுத்து கொள்ளப்பட்டது.
ஆட்டம் தொடங்கியதும் ஜெர்மைன் பிளாக்வுட், தொடக்க வீரர் பிராத் வெய்ட்டுடன் ஜோடி சேர்ந்தார். 170 பந்துகளில் அரைசதத்தை கடந்த பிராத்வெய்ட் 75 ரன்னில் அஸ்வின் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து களமிறங்கிய பிளாக்வுட் 20 ரன்களும், டி சில்வா 10 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அப்போது திடீரென போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.
மழை நின்றதும் ஆட்டம் தொடங்கி 3-ஆம் நாள் முடிவில் 108 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 5 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. அலிக் அதானேஷ் 37 ரன்னுடனும், ஜேசன் ஹோல்டர் 11 ரன்னுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 2 விக்கெட்டுகளும், அஸ்வின், முகேஷ் குமார், முகமது சிராஜ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணியை விட வெஸ்ட் இண்டீஸ் அணி 209 ரன்கள் பின் தங்கி உள்ளது. இன்று 4-ஆம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.