சென்னை : இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்கான படிவத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கைநாட்டு வைத்துள்ளார்.
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த மூன்று தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்த வேட்பாளர்களுக்கு, கட்சியின் சின்னமான இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்காக அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து படிவம் பி வழங்கப்பட்டது. இந்த படிவத்தில் அக் கட்சியின் பொதுச் செயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் கையெழுத்துக்குப் பதில் இடது கையின் பெருவிரல் ரேகை பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிவம் பி-யில் ஜெயலலிதாவின் கையெழுத்து இல்லை.அதற்குப் பதிலாக அவருடைய விரல் ரேகை பதிக்கப்பட்டு இருக்கிறது என்று ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் பேராசிரியர் பி. பாலாஜி, இதற்கு ஒப்புதல் அளித்து இருக்கிறார். மேலும் அப்போலோ மருத்துவமனையின் மருத்துவர் பாபு ஆப்ரஹாம் சாட்சிக் கையெழுத்து இட்டுள்ளார். ஜெயலலிதா நன்றாக பேசுகிறார், ஆலோசனை நடத்துகிறார் என்று செய்திகள் வரும் நிலையில், படிவத்தில் கையெழுத்திடாமல் கைநாட்டு வைத்துள்ளது பலவித யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.
இடது கைவிரல் கைநாட்டு ஏன்?
முதல்வர் ஜெயலலிதா கையொப்மிடாதது ஏன் என்ற கேள்வி ஒருபக்கமிருக்க, அவர் வலதுகை ரேகையை வைக்காமல் இடது கையில் கைநாட்டு வைத்தது ஏன் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. கையெழுத்து இடவேண்டிய முதல்வர் ஜெயலலிதா சமீபத்தில் டிரகியோடோமி சிகிச்சைக்கு உட்பட வேண்டியதிருந்ததால் அவரது வலதுகையில் நோய் தொற்று இருக்கிறது. ஆகவே அவர் தனது முன்னிலையில் இடது கையில் கைநாட்டு வைத்ததாக பேராசிரியர் பி.பாலாஜி விளக்கம் தெரிவித்துள்ளார்.