ஏன் கொண்டாட வேண்டும் இளையராஜாவை!?: ஒரு புதிய கோணம் : 1

Must read

நியோகி

யாரிப்பாளர்கள் சங்கத் தலைவராய் திரு. விஷால் பொறுப்பேற்றிருக்கிறார் ! அவருக்கு நமது ப்ரத்யேகமான வாழ்த்துக்கள் !

இப்போது தானே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்…? அதற்குள் அப்படி என்ன சாதித்து விட்டார் ப்ரத்யேகமான வாழ்த்துக்கள் சொல்வதற்கு என்று கேட்பீர்களேயானால்….காரணம் இருக்கிறது !

ஆம், பதவியேற்றவுடன் அவர் செய்த முதல் அறிவிப்பு அப்படிப்பட்டது !

புதிய வரவான, நாற்பது வயதே நிரம்பிய இந்த இளைஞரின் தலைமையிலான சங்கம் “மகா ஞானி” இளையராஜா அவர்களுக்கு  பாராட்டுவிழா எடுக்கப்படும் என்று ஓங்கி அறிவித்திருக்கிறது ! அந்த நன்றியுணர்ச்சி நம்மை நெகிழ வைக்கிறது !

இதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர்களாக இருந்த எவருக்கும் இப்படி ஒரு நியாயமான எண்ணம் எழுந்ததில்லை என்பதனால்… திரு. விஷால் தலைமையிலான சங்கத்து நிர்வாகிகளின் அந்த நன்றியுணர்ச்சியை போற்றி, ஈர மனதோடு, தலைவணங்கி வரவேற்கிறேன் !

“மகா ஞானி” இளையராஜாவுக்கு எடுக்கப்படவிருக்கும் அந்தப் பாராட்டு விழா மாபெரும் வெற்றியினைப் பெற வேண்டும் ! தமிழக திரைப்பட உலகம் நன்றியுடையது என்பதை உலகுக்கு பறை சாற்ற வேண்டும் என நெஞ்சார வாழ்த்துகிறேன் !

ஆம், கடந்த நாற்பதாண்டுக் காலத் தமிழ்த் திரையுலகின் ஆகப் பெரிய படைப்பாளியாக ஒளி வீசுகிறார் “மகா ஞானி” இளையராஜா ! அவருக்கு ஈடான ஒரு டெக்னீஷியன் இங்கில்லை என்று என்னால் அறுதியிட்டு சொல்ல முடியும்! அவரது இசையின் நுணுக்கங்களை நூற்றுக்கு நூறு திரையில் பிரதிபலிக்க அவரது சக படைப்பாளிகள் யாராலும் முடிந்ததில்லை என்பது மறுக்கவே முடியாத உண்மை !

கொஞ்சம் இயக்குனர் மகேந்திரன், கொஞ்சம் கேமிராக் கலைஞர் பாலு மகேந்திரா, கொஞ்சம்  கே.விஸ்வநாத், கொஞ்சம் ஃபாஸில், கொஞ்சம் மணிரத்னம், கொஞ்சம் இயக்குனர் பாலா,  என எல்லோருமே கொஞ்சம் கொஞ்சம்தான் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும் !

எடுத்து வரப்பட்ட காட்சிகளுக்கு தனது பிண்ணனி இசையின் மூலமாக அவர் உயிர் கொடுத்த அளவுக்கு, அவர் கொடுத்த பாடல்களை யாராலும்  திரைப்படுத்த முடிந்ததில்லை !

நமது இயக்குனர்கள் திறமை வாய்ந்தவர்கள்தான் ! அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை ! ஒரு பாடலைக் காட்சிப் படுத்தும் போது, அதன் லொகேஷன் –

அப்போது கிடைக்கும் ஒளி – நடிக – நடிகர்களின் நடிப்பு –உடை- ப்ராபர்ட்டீஸ் – நடனம் – லொகேஷனில் வீசும் காற்று – ட்ராலி, பேன், ஜூம் ஆகியவைகளின் டெம்ப்போ என இன்னும் எவ்வளவோ விஷயங்கள் ஒன்றிணைந்து கச்சிதமாக “அமைந்தாக” வேண்டும் !

அவ்வாறு எல்லாம் அமைவதற்குக் காத்திருந்து, இளையராஜாவின் பாடலை சற்றும் மாற்றுக் குறையாமல் பரிபூரணமாக “திரை பெயர்க்க” வேண்டுமென்றால்….ஒரு பாடலுக்கு மட்டுமே அவர்களுக்குக் குறைந்தது நாற்பது கால்ஷீட்கள் தேவைப்படும் ! அது, படத்தின் பாதி பட்ஜெட்டை எட்டிவிடும் ! ஆகவே, கிடைக்கும் 3 அல்லது 4 கால்ஷீட்களில், அவர்கள் எவ்வளவு முயன்றாலும், அவ்வளவுதான் முடியும் !

மேலும், இளையராஜாவின் இசை நுணுக்கங்களை, பரிபூரணமாக காட்சிப்படுத்தி விடுவது என்பது, தாய்மையின் தவிப்பை, அப்படியே நூற்றுக்கு நூறு சதவிகிதம் எழுத்தில் வடித்து விடமுடியும் என்னும் அபத்தத்துக்கு ஈடானது !

அப்படியானதொரு உச்ச படைப்பாளியாய், தன் முத்திரையை ஏறத்தாழ முப்பதாண்டுகளுக்கும் மேல் தலைமுறை தாண்டி ஆழப் பதித்து, தான் பங்கேற்ற ஒவ்வொரு படங்களையும் தன்னால் இயன்ற அளவுக்கு வெற்றிப் படங்களாக்கி, தயாரிப்பாளர்களின் முதலீடுகளுக்கு தன் ஹார்மோனியக் கட்டைகளைக் கொண்டு முட்டுக் கொடுத்தவர் “மகாஞானி” இளையராஜா என்றால் அது மிகையல்ல !

ஒரு கட்டத்தில்…சுவர் நிறைக்கும் பத்து பிட் போஸ்டரில், “இசை இளையராஜா – படப்பிடிப்பு ஆரம்பம்” என்று  மட்டுமே போட்டு பல மடங்குக்கு விற்ற தயாரிப்பாளர்களெல்லாம் உண்டு !இளையராஜா நட்டப்பட்டதுண்டு ! காபிரைட் விஷயத்தில் இன்னமும் நட்டப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார் ! ஆனால், இளையராஜாவால் நட்டப்பட்டவர் என்று எவரும் இல்லை !

இதைவிட ஒரு மனிதனின் கலை வாழ்வுக்கு வேறென்ன பெருமை வேண்டும்…? அதைக் கூட, “ என் தாய் – தந்தை – குரு இட்ட பிச்சை…” என்றே ஏற்றுக் கொள்கிறார் “மகாஞானி” இளையராஜா !

எங்கு, பணமும் – புகழும் மிகுந்திருக்குமோ…? அங்கு பொறாமையும் தூக்கலாகவே இருக்கும் ! தூஷணைகள் மலிந்திருக்கும் ! புரளிகள், புளியமரத்தைப் பிடித்துக் கொண்டு தொங்கியபடி கெக்கலிக்கும் ! பாதகங்களுக்கு அஞ்சாத இந்த பாழும் உலகில் அது தவிர்க்க முடியாதது !

ஆக, அப்படிப்பட்டவற்றையெல்லாம் தூக்கித் தூர எறிந்து விட்டு… தமிழர்களாகிய நாம், பதினெட்டுக் கோடிக் கரங்களாலும் வாரி அணைத்து “வாழிய, எம் ராஜா…” என உச்சி முகர்ந்து கொண்டாடுவதே…. அந்த “மகாஞானி”க்கு செலுத்தும் உண்மையான, நியாயமான நன்றிக் கடனாக இருக்க முடியும் !

எத்தனையோ இரவுகளை இதமாக்கி நம்மை உறங்க வைத்தவர் இளையராஜா ! எத்தனையோ பாரம் சுமந்த மனங்களுக்கு தாயின் மடியாய் தன் இசையை அனுப்பித் தந்தவர் இளையராஜா ! எத்தனை, எத்தனையோ காதல்களுக்கு மாய இறக்கைகளைப் பொருத்தி ஆசீர்வதித்தவர்  இளையராஜா !

“ஹௌ டு நேம் இட்” – “நத்திங் பட் விண்ட்” போன்ற படைப்புகளால் தன் இசைக் கோலங்களை ப்ரபஞ்சமெங்கிலும் விசிறி அடித்தவர் இளையராஜா !

“ஜனனி, ஜனனி…” என்னும் கல்யாணி ராகப் பாடலை இசைத்து… சக்தி லோகத்தின் சுற்றுப் பிரகாரங்களில் நம்மை கை பிடித்து அழைத்து சென்ற எளிமையான ஞான குரு இளையராஜா !

மூன்றே அடிகளில் பாரையளந்து முடித்துக் காட்டியவன் அந்த உத்தமன் ! அது போல, ச-ரி-க என்னும் மூன்றே ஸ்வரங்களில் பாட்டை முடித்துக் காட்டியவர் நமது இளையராஜா !

இது போன்ற இசை நுணுக்கங்கள் தெரியாமலேயே அவரது இசைக்கு நாம் மயங்கிக் கிடக்கிறோம் !

இளையராஜாவின் இசையை முழுமையாக புரிந்து கொண்டவர்கள் இங்கே யாருமில்லை ! அந்த வகையில், அவரது இசை கடவுளுக்கு சமமானதாகவே உயர்ந்து நிற்கிறது !

ஆம், “மகாஞானி” இளையராஜாவுக்கு ஈடானதொரு படைப்பாளி, இனி இங்கே தோன்றுவது என்பது மிக மிக அரிது !

இசை ரசிகர்களாகிய நாம் ஒவ்வொருவரும் அவரை வணங்கிப் போற்றக் கடமைப் பட்டிருக்கிறோம் !

குறித்துக் கொள்ளுங்கள்…!!

இளையராஜா என்பது ஒரு மனிதனின் பெயர் மட்டுமல்ல ; அது, இசைக்கு ஒரு மாற்றுச் சொல் !

( தொடரும்…)

More articles

Latest article