பாரதிய ஜனதா கட்சியால் ஏன் தமிழகத்தில் தடம் பதிக்க முடியவில்லை?

சிறப்புக்கட்டுரை: எழுத்தாளர் ராஜ்குமார் மாதவன்

பாரதிய ஜனதாவின் வட இந்திய தலைவர்களுக்கு, நாடு முழுக்க வெற்றி பெற்ற இந்துத்துவ தேர்தல் பிரச்சாரம், தமிழக்த்தில் மட்டும் தாங்கள் நினைத்தபடி வெற்றியை ஏன் தேடித்தரவில்லை என்ற ஆயிரமாயிரம் கேள்விகள் அவர்களின் மனதை துளைத்துக்கொண்டு இருக்கின்றது.

தமிழகத்தில் ஆண்டு முழுக்க இந்து சமய கொண்டாட்டங்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றது. அனைத்து கோவில்களிலும் பக்தர்களுக்கு பஞ்சமே இல்லை, அப்படியிருந்தும் இந்துத்துவ கொள்கை இம்மி அளவுமும் அரசியலில் எடுபடாத காரணத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதை புரிந்துகொள்ள வேண்டும் என்றால், அவர்கள் தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு, வழிபாட்டு முறைமை மற்றும் சமூக அரசியலை புரிந்து கொள்ள வேண்டும். தமிழத்தில் நான்கு சர்வதேச விமான நிலையங்கள், எண்ணற்ற உள்நாட்டு விமான நிலையங்கள், மூன்று சர்வதேச துறைமுகங்கள் மற்றும் எண்ணிலடங்கா கல்வி நிறுவனங்கள், எப்படி சாதித்தார்கள்? இதை தெரிந்துகொள்ள அவர்கள் வரலாற்றின் தடம் பார்க்க வேண்டும்.

மோடி அரசாங்கத்தின் புதிய கல்வி கொள்கையின் லட்சியம் Gross  Enrollment  Ratio  (GER ) 2035 -ஆம் ஆண்டு வாக்கில் 50% தொடவேண்டும் என்பது. தமிழ்நாடு இந்த இலக்கை அடைந்து ஆண்டுகள் பலவாயிற்று. இந்த சாதனையின் தொடக்கம் எங்கிருந்து தொடங்கியது ?

நாடு சுதந்திரம் அடைந்து துயில் எழாத சமயத்தில், 1954-ல் தமிழகத்தின் அப்போதைய முதல்வர் காமராஜர் மைல் கல்லுக்கு ஒரு பள்ளிக்கூடம் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். ஏழை மக்களின் அருகாமையில் பள்ளிக்கூடம் அமைந்தால் படிக்க மாணவர்கள் வருவார்கள் என்ற அவரது திட்டம் உடனடியாக வெற்றி காணவில்லை. மாணவர்கள் பள்ளிக்கூடம் வராத காரணத்தை தேடி கண்டுபிடித்தார். குடும்ப வறுமையின் சூழல், குழந்தைகளை மாடு மேய்க்கவும், வேலைக்கும் அனுப்பியது. பள்ளிக்கல்வியை விட பசி பெரியதானது. அதை உணர்ந்த காமராசர், மதிய உணவு திட்டத்தை கொண்டுவந்தார். பள்ளிக்கு படிக்க வரும் அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவு தரப்படும் என்றார். 100  கோடியை தொடாத அன்றைய தமிழக நிதிநிலையில் அது மிக பிரம்மாண்ட திட்டம்.  ஆனால், பிச்சை புகினும் கற்கை நன்றே என்ற தமிழர்களை, பசி பள்ளிக்கூடங்களை நோக்கி ஈர்த்தது. 50  வருடங்கள் கழித்து, நாட்டின் ஏனைய பகுதிகளில் இன்று இந்த திட்டம் அமுலுக்கு வந்தது.

1972 -ல் கருணாநிதி கொண்டுவந்த நுகர்பொருள் வாணிப கழகம், பொது விநியோக திட்டத்தில் ஒரு புரட்சியை விதைத்தது. ஏழை விவசாயிகளின் வெள்ளாமை குறைந்த பட்ச உத்தரவாத விலையில் வாங்கப்பட்டது. பொது விநியோக திட்டத்தின் மூலமாக ஆண்டு முழுவதும் குறைந்த விலையில் அத்தியாவசிய உணவு பொருட்கள்  விநியோகிக்கப்பட்டது. இது அடுத்து வந்த காலங்களில், அரிசி விலையின்றி கொடுக்கப்பட்டு உணவுக்கான உத்தரவாதம் ஏழை குடும்பங்களுக்கு அளிக்கப்பட்டது. இதனால், பள்ளிக்கான மாணவர்களுக்கு பஞ்சம் ஏற்படவில்லை.

இருந்தும், ஏறக்குறைய 50% பெண்கள் இருக்கும் மாநிலத்தில் GER  50% எப்படி சாத்தியமானது. பெண்கள் பள்ளிக்கல்வி தொடராமல் இது சத்தியமாக வாய்ப்பேயில்லை. இதை எப்படி சாத்தியப்படுத்தினார்கள்?

பள்ளி ஆரம்ப கல்வி அனைத்து கிராமத்தில் இருந்தாலும், நடுநிலை மற்றும் உயர் நிலை கல்விக்கு பயண படவேண்டியிருந்தது. அப்போது , கருணாநிதி அவர்கள் மாணவர்களுக்கு இலவச பேருந்து சலுகை அளித்தார். அதன் மூலம், கல்விக்கான பயணங்கள் தொடர்ந்தது. பெண் பிள்ளைகள், இடை நிறுத்தம் வருவதை தவிர்க்க நடுநிலை பள்ளிப்படிப்பை முடித்த பெண்களுக்கு திருமண உதவி திட்டத்தை கொண்டுவந்தார். அந்த திட்டம் மேலும் விரிவடைந்ததனால் பெண் கல்வி தொடர்ந்தது. அதன் தொடர்ச்சியாக, பெண்களுக்கு விலையில்லா மிதிவண்டி, மடிக்கணனி என்று பெண்களை மேல்நிலை பள்ளி கல்வியையும் முடிக்க வைத்தார்கள். இத்திட்டங்கள் கொண்டுவந்த காலங்களில், இலவசங்கள் என்று நாடுமுழுக்க விமர்சிக்க பட்டாலும், காலம் அதன் பயனை உணர்த்தியது.

பெண் படித்தால் வீடே ஒரு பல்கலைக்கழகம் ஆகும் என்பதை திராவிட கட்சிகள் நம்பினார்கள். அவர்களுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. இன்று தமிழகத்தில், 37  பல்கலைக்கழகங்கள், 552  பொறியியல் கல்லூரிகள், 449  பாலிடெக்னிக் கல்லூரிகள், 566  கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் என்று ஒரு பெரிய கல்வி புரட்சியே செய்து காட்டி உள்ளார்கள்.

இன்றும், GER  உயர்வுக்கு  நுழைவுதேர்வே உதவும் என்று நினைப்பவர்களுக்கு இந்த சமூக அறிவியல் எப்போதும் புரியாது.  இன்னமும், 50  ஆண்டுகள் ஆனாலும் அவர்களால் 50 % GER  அடையவே முடியாது. இதில், பெருமை கொள்ளவேண்டியது என்ன வென்றால், கிட்டத்தட்ட 87 % கல்வியறிவு கொண்ட மாநிலத்தில் 50 % GER என்பதை, ஏனைய மாநிலங்கள் கனவிலும் நினைக்க முடியாது.

வெற்றி கதை மேலும் தொடர்கிறது. இன்று தமிழகத்தில் 60 க்கும் மேலான மருத்துவ கல்லூரிகள் உண்டு. தமிழர்கள், மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி என்ற இலக்கை நோக்கி நகர்கிறார்கள். இதனால், சுகாதாரத்துறையில் அவர்கள் ஒரு இமாலய சாதனையை உலகத்தரத்திற்கு ஈடாக அடைந்துவிட்டார்கள்.

கல்வி துறையில் பெற்ற வெற்றி, தொழில் புரட்சியாக மாறியது. இன்று நாட்டில், உள்நாட்டு உற்பத்தியில் இரண்டாவது இடத்தி;ல் உள்ளது. தமிழகத்தில், யாருடைய பெயருக்கு பின்னாலும் சாதிய பெயர் இல்லை. 50  ஆண்டுகளுக்கு முன்னர், நாடு முழுக்க இருந்த வழக்கத்தின் படி இங்கும்  பெயரோடு சாதிய அடையாளம் தொற்றி நின்றது. ஆனால், தமிழக அரசியல் சூழ்நிலை அதை சாதித்து காட்டியது. இது, மற்ற மாநிலங்கள் கற்க வேண்டிய பாடம், ஆனாலும் கற்க முடியாத பாடம்.

கேரளத்து பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஓ. ராஜகோபால் , கூறியது போன்று நிறைந்த கல்வி அறிவு உடைய மாநிலத்தில், பாரதிய ஜனதா- வால் கால் ஊன்ற முடியவில்லை என்ற கூற்று ஓரளவு உண்மையே. இருந்தும், தமிழகம் போன்று திட்டமிட்டு கல்வி, பெண்ணுரிமை, சுகாதாரம், தொழில் வளத்தில் முன்னேறிய மாநிலத்தில், மதத்தால் பிரிவினை உருவாக்குவதும், அரசியல் பலன் ஈட்டுவதும் இயலாத காரியம். தமிழர்கள் இறைநம்பிக்கையோடு உள்ளவர்கள், ஆனால் அரசியல் தங்கள் இறையோடு விளையாடுவதை எந்நாளும் அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில், அவர்கள் படித்துவந்த பாதை, சாதித்த சமூக மாற்றங்கள், அவர்களை எப்போதும் முன்னேற்றம் குறித்தே சிந்திக்க தூண்டும். அவர்கள் முன்னேற்ற பாதையில், மத அரசியலுக்கு இடமே இல்லை.