சென்னை: பள்ளிகளில் கணினி ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை திமுக தலைவர் ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என்று ஐ. பெரியசாமி எம்எல்ஏ உறுதி அளித்து உள்ளார்.

கணினி ஆசிரியர்களுக்கு TET, AEEO, DEO போன்ற தேர்வுகள் கிடையாது. 2011ம் ஆண்டில் அதிமுக அரசு வந்தவுடன் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டாலும் கணினி அறிவியலில் பி.எட் பட்டம் முடித்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக தனியார் பள்ளியில் கூட வேலை கிடைக்காத நிலையில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர். 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பிற்கு, ‘டேப்’ மட்டும் வழங்கிவிட்டு, பள்ளியில் உள்ள பிற பாட ஆசிரியர்களை வைத்து தான் பாடம் நடத்தப்படுகிறது.

ஆகையால் கணினி அறிவியல் பாடத்தை பயிற்றுவிக்க அதற்கு உரிய துறையில் பட்டம் பெற்றுள்ள கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று கணினி ஆசிரியர் சங்கத்தினர் பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.

இந் நிலையில், திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் ஐ. பெரியசாமியை சந்தித்த கணினி ஆசிரியர் சங்கத்தினர், கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் பள்ளிகளில் கணினி அறிவியல் பாடம் கொண்டு வர வேண்டும், கணினி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அவர்கள் அளித்த மனுவை பெற்றுக்கொண்ட ஐ. பெரியசாமி, இந்த கோரிக்கை திமுக தலைவர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.