சென்னை:
வைகோ கைது செய்யப்படும் சூழல் உருவாகக் காரணம் என்ன என்பதை, அக்கட்சி அவைத் தலைவர் துரைசாமி விளக்கியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
ஈழத்தமிழர்கள்படுகொலையைத் தடுக்கக் கோரி, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு 2004 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக எழுதிய 20 கடிதங்கள், 9 முறை நேரில் சந்தித்து விடுத்த கோரிக்கைகள், பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் வைகோவுக்கு எழுதிய மூன்று கடிதங்களைத் தொகுத்து உருவாக்கப்பட்ட ‘I Accuse, நான் குற்றம் சாட்டுகிறேன்’ ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா, கடந்த 15.7.2009 அன்று, சென்னை இராணி சீதை அரங்கில் நடைபெற்றது.
திரு பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட, கவிஞர் இன்குலாப் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
இந்த விழாவில் ஏற்புரை நிகழ்த்திய பொதுச்செயலாளர் வைகோ, ஈழத்தமிழர்கள் படு கொலையைத் தடுக்கத் தவறிய இந்திய அரசையும், அதற்குத் துணைபோன கலைஞர் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. அரசையும் கண்டித்தும், விடுதலைப்புலிகளை ஆதரித்தும் உரை ஆற்றினார்.
இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக, நிகழ்ச்சி நடந்து முடிந்து ஐந்து மாதங்கள் கழித்து, தமிழகக் காவல்துறையின் நுண்ணறிவு எழுத்தர், 9.12.2009 அன்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன் அடிப்படையில், இந்தியத் தண்டனைச் சட்டம் 124 ஏ மற்றும் 153 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 30.12. 2010 ஆம் நாள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் இந்த வழக்கில் கழகப் பொதுச்செயலாளருக்கு நீதிமன்றத்தில் இருந்து எந்தவித சம்மனும் அனுப்பப்படவில்லை.
கடவுச்சீட்டு பெற விண்ணப்பித்தபோது, இந்த வழக்கு நடைபெறுகின்ற நீதிமன்றத்தில் இருந்து தடை இன்மைச் சான்றிதழ் பெற வேண்டும் என்று பாஸ்போர்ட் அதிகாரிகள் கூறினர்.
எனவே, பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நேற்று (03.04.2017) காலை சென்னை அல்லிக்குள வளாகத்தில் இருக்கின்ற 13-ஆவது பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். பிணை விடுதலை கோரி விண்ணப்பிக்கவில்லை.
தேசத் துரோக வழக்கு என்பதால் நீதிமன்ற நடுவர், பொதுச்செயலாளர் அவர்களை 17.4.2017 வரை நீதிமன்றக் கhவலில் வைக்கும்படி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்,
தமது கைது குறித்துக் கண்டன அறப்போராட்டங்கள் நடத்த வேண்டாம் என்றும், தம்மைச் சந்திப்பதற்கா சிறைக்கு யாரும் வர வேண்டாம் என்றும், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாம் தொடுத்த வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, தமிழகம் முழுவதும் கருவேல மரங்களை அகற்றுகின்ற பணியில் மறுமலர்ச்சி தி.மு.கழகத் தோழர்கள் ஈடுபட வேண்டும் என்றும் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கேட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.