சென்னை,

சிபிஎஸ்இ கல்வி வாரியம் இன்று அகில இந்திய மருத்துவ தேர்வுக்கான நுழைவு தேர்வு (NEET) முடிவுகளை வெளியிட்டது.

இன்று வெளியான  தேர்வு முடிவில் நாம் பயந்தபடியே, தமிழகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஒருவர் கூட முதல் 25 இடங்களை பெறமுடியவில்லை என்பது வருத்தப்படக்கூடியதே.

இதுகுறித்து கல்வியாளர்கள் பல்வேறு கருத்துக்களை கூறி வந்தாலும், நீட் தேர்வு நடைபெறு வதற்கு தகுந்த கல்விமுறை, அதை கற்பிப்பதற்கு தேவையான ஆசிரியர்கள் நியமிக்கப்படாததே காரணம்.

கடந்த ஆண்டே, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி 2017ம் ஆண்டு நீட் தேர்வு நடைபெறும் என்று மத்தியஅரசு தெரிவித்துள்ள நிலையில்,

கடைசி நேரம் வரைக்கும் நீட் தேர்வு தமிழக்ததில் இல்லை என்று கூறி, மக்களையும், மாணவர்களையும் குழப்பத்துக்கு ஆளாக்கி,  நீட் தேர்வு குறித்து சரியான அறிவிப்பு வெளியாடத மாநில அரசுதான் இதில் முதல் குற்றவாளி.

ஒரு வருடத்திற்கு முன்பே மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், நமது மாநிலத்தில் அமல்படுத்தியிருக்கும்  சமச்சீர் கல்வி  பாடத் திட்டத்திற்கும், சிபிஎஸ்இ நடத்தி வரும் பாடத்திட்டத்திற்கும் 100 சதவிகிதம் வேறுபாடு உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்தி வரும் அனைத்துவித தேர்வுகளும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை ஒட்டியே கேள்வித்தாள்கள் தயாரிக்கப்பட்டு வருவது அனைத்து கல்வியாளர்களுக்கும், ஏன் நமது பள்ளிக்கல்விதுறை அதிகாரிகளுக்கும்  தெரியும்.

இருந்தும், தமிழகத்தில், பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டத்தை மாற்ற முயற்சி எடுக்காதது கல்வி அதிகாரிகள் மற்றும் அரசின் அக்கறையின்மை.

மாநில பாடத்திட்டத்தின்படி கேள்வித்தாள்கள் நீட் தேர்வில் கேட்கப்பட்டிருந்தால், தமிழகத்தில் பெரும்பாலான மாணவர்கள் நீட் தேர்வை வெற்றிக்கொண்டிருப்பார்கள் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

ஆனால், நமது மாணவர்கள் படித்து வரும் பாடத்திட்டம் வேறு, நீட் தேர்வில் கேட்கப்படும் பாடத்திட்டம் வேறு.

இப்படி இருக்கையில், நமது மாணவர்கள் முன்னிலையில் வருவார்கள் என்று எதிர்பார்ப்பது கேலிக்கூத்து.

இதுபோன்ற வினாக்களை எழுப்பியே மதுரை ஐகோர்ட்டு கிளை, நீட் தேர்வு ரிசல்ட் வெளியிட சிபிஎஸ்இ தடை விதித்திருந்தது.

ஆனால், சிபிஎஸ்இ கல்வி வாரியமோ, மதுரை ஐகோர்ட்டின் கேள்விக்கு பதில் கூற முடியாமல், உச்சநீதி மன்றத்தில் தஞ்சமடைந்தது.

உச்சநீதி மன்றம்  மதுரை ஐகோர்ட்டின்  தடையை உடைத்தெறிந்து, நமது தலையில் கல்லை போட்டுள்ளது.

பெரும்பாலான மாநிலங்களில் சிபிஎஸ்இ கல்வி வாரிய பாடப்பிரிவுகளே கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், நமது மாநிலத்தில் மட்டுமே முற்றிலும் மாறுபட்ட சமச்சீர் கல்வியை மாணவர்களுக்கு சொல்லிக்கொடுத்து, அகில இந்திய அளவிலான தேர்வுகளை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு மாணவ மாணவிகளை பின்தள்ளி வைத்திருக்கிறோம்.

இதுவரை மாநிலத்தில் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ நுழைவு தேர்வு நடைபெற்று வந்தது. இதன் காரணமாக கிராமப்புறம் முதல் நகரம் வரை பெரும்பாலான மாணவர்கள் மருத்துவம் படிக்க ஏதுவாக இருந்தது.

ஆனால், நீட் தேர்வு காரணமாக  இந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த மாணவர்களின் டாக்டர் கனவு கலைந்துவிட்டது என்பதே உண்மை.

 

எனவே, தமிழகத்தில் உடடியாக மேல்நிலை கல்வி முறையை சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு மாற்ற வேண்டும் அல்லது நீட் போன்ற தேர்வுகள் நடைபெறாத வண்ணம் ஆட்சியாளர்கள் உறுதியான  நடவடிக்கை எடுக்க வேண்டும்….

இதை செய்யாவிட்டால், அரசும், அதிகாரிகளும்  மாணவ சமுதாயத்தை வஞ்சித்த பெருங்குற்றத்துக்கு ஆளாக நேரிடும்…

இந்த மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வை கடந்த மாதம் நாடு முழுவதிலுமிருந்து 11.38 லட்சம் மாணவர்கள் எழுதினர்.  இன்று நீட் தேர்வு முடிவுகள் சிபிஎஸ்இ இணையதளத்தில் (cbseresults.nic.in) வெளியிடப்பட்டது.

மதிப்பெண் அடிப்படையில் முதல் 25 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பெயர் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் எவரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.